மக்களை மூடர்களாக நினைக்க வேண்டாம்: பிரதமர் மீது பிரியங்கா காந்தி தாக்கு

மக்கள் அனைவரும் மூடர்கள் என்று எண்ணுவதை பிரதமர் மோடி கைவிட வேண்டும்; அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் கங்கை நதி படித்துறைக்கு புதன்கிழமை பிரசாரம் செய்ய வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்கும் பொதுமக்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் கங்கை நதி படித்துறைக்கு புதன்கிழமை பிரசாரம் செய்ய வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை வரவேற்கும் பொதுமக்கள்.


மக்கள் அனைவரும் மூடர்கள் என்று எண்ணுவதை பிரதமர் மோடி கைவிட வேண்டும்; அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான அவர், கங்கை நதியில் 3 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு படகுப் பயணம் மூலமாக, கங்கை நதியின் கரையோர மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், புதன்கிழமை மிர்சாபூருக்கு சென்ற பிரியங்கா காந்தி, அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசமைப்பையும் பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டார். நீங்கள் எல்லோரும் அங்கம் வகிக்கும் அமைப்பையும் அவர் விட்டு வைக்கவில்லை.
ஆக, மக்கள் அனைவரும் மூடர்கள் என்று எண்ணுவதை பிரதமர் மோடி கைவிட வேண்டும். இதையெல்லாம் அவர்கள் கவனித்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
நாம் எதையாவது செய்தால் நம்மை தொந்தரவு செய்கிறார்கள். அதைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை. அவர்களுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடருவோம்.  எங்களை எந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறார்களோ, அந்த அளவுக்கு எங்களது போராட்டம் வலுவடையும் என்றார் அவர்.
முன்னதாக, அப்பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் பிரியங்கா காந்தி பேசியபோது, மக்களுக்கு இந்த அரசு லாலிபாப் (இனிப்பு) வழங்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. 
முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, ஊரக வேலை உறுதித்திட்டம் என்ற மாபெரும் வேலைவாய்ப்பை உருவாக்கியது. ஆனால், பாஜக ஆட்சியில் தொழிலாளர்களை நீக்கிவிட்டு இயந்திரங்களை கொண்டு வந்தனர். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்றார் பிரியங்கா காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com