மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதி: ஐரோப்பிய யூனியனில் தீர்மானம் தாக்கல்

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது.
மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதி: ஐரோப்பிய யூனியனில் தீர்மானம் தாக்கல்


ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் கூட்டாளியான சீனா மட்டும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகிறது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அஸார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும். மேலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும்.
எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பிய யூனியன் எந்த முடிவும் எடுக்கவில்லை. இத்தீர்மானத்துக்கு 28 நாடுகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பிரான்ஸ் அரசு, மசூத் அஸார் மீது கடந்த 15-ஆம் தேதி பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பட்டியலில் மசூத் அஸாரை இணைக்கவும், மற்ற நாடுகளை வலியுறுத்துவோம் என பிரான்ஸ் தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com