
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜெளரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
ரஜெளரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள சுந்தர்பானி செக்டார் அருகில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை சிறிய ரக பீரங்கிகளையும், வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் யாஷ் பால் (24) என்ற இந்திய வீரர் உயிரிழந்தார். அவர், உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மண்டாலை கிராமத்தைச் சேர்ந்தவர்.
இதேபோல், நெளஷீரா செக்டாரிலும் பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை மதியம் அத்துமீறி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அவர்களின் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். கடந்த திங்கள்கிழமை இரவு, சுந்தர்பானி, அக்னூர் செக்டார் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். அவர்களில், பலத்த காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார் அவர்.
கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக, கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம், 2,936 முறை இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.
மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு, பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...