வாராணசியில் மோடி மீண்டும் போட்டி: 184 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்
வாராணசியில் மோடி மீண்டும் போட்டி: 184 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி வேட்பாளராக அமித் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போது, பாஜக மூத்த தலைவர் அத்வானி அத்தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இத்தேர்தலை பாஜக எதிர்கொள்வதால் வேட்பாளர் தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் கடந்த 16,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தேர்தல் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளனர்.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மூத்த தலைவரும், தேர்தல் குழு  செயலாளருமான ஜே.பி.நட்டா, பாஜகவின் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.  அதில் மொத்தம் 184 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வாராணசியில் மோடி: உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அத்தொகுதியில் 5.81 லட்சம் வாக்குகளைப் பெற்ற மோடி, இரண்டாவது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை விட 3.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அத்தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து விட்டார். வாராணசியில் மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அத்வானி தொகுதியில் அமித் ஷா போட்டி: தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவர் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இப்போது, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காந்தி நகர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் தொடர்ந்து 5 முறை அத்தொகுதியில் வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு முதல் காந்தி நகர் மக்களவைத் தொகுதி பாஜக வசம் உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் ஒருமுறை இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டி: கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமேதியில் ராகுல் வெற்றி பெற்றார். எனினும், இந்தமுறை அத்தொகுதியில் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுவது ராகுலுக்கு சற்று நெருக்கடி ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தாலும், அவர் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேசத்தின் லக்னெள தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி, மகாராஷ்டிரத்தின் நாகபுரி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார். மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு அருணாசலப் பிரதேசம் கிழக்கு தொகுதியிலும், வி.கே. சிங், காஜியாபாதிலும், மகேஷ் சர்மா, கெளதம புத்தா நகர் (நொய்டா) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தமிழக வேட்பாளர்கள்: உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், கேரளம், மணிப்பூர், ஒடிஸா, ராஜஸ்தான்,  சிக்கிம், தெலங்கானா, உத்தரகண்ட், குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் வேட்பாளர்களும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் முதலாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பிகாரில் பாஜக போட்டியிடும் 17 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டனர். அந்த மாநிலத்தில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து வேட்பாளர்களை அறிவிக்கும் வகையில், பிகார் பாஜகவுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கும்மனம் ராஜசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு திரிபுரா ஆளுநராக இருந்தார்.

தமிழக பாஜக வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா வியாழக்கிழமை அறிவித்தார்.          
      

தொகுதிகள்  வேட்பாளர்கள்
கன்னியாகுமரி  பொன்.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடிதமிழிசை செளந்தரராஜன்
சிவகங்கைஹெச்.ராஜா
கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்
ராமநாதபுரம் நயினார் நாகேந்திரன்


 மத்திய நிதித்துறை இணையமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 1999-இல் நாகர்கோவில் தொகுதியில் வெற்றிபெற்றார். அதன்பிறகு நாகர்கோவில் தொகுதி கன்னியாகுமரியாக மாற்றப்பட்டது. 2014-இல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

அதேபோல், சிவகங்கை தொகுதியில் போட்டியிட பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
கனிமொழியை எதிர்த்து தமிழிசை: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், இதே தொகுதியில் 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன். அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com