
ஹோலி பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை, நாடு முழுவதும் உள்ள மக்களால் கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஹோலி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பரப்பும் வகையில் இந்த வண்ணங்களின் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டு மக்களுக்கு அளித்துள்ள தகவலில், தீய சக்திகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்றதை நினைவு கூரும் வகையில், ஹோலி பண்டிகையை கொண்டாடுகிறோம். நட்புணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் இந்த பண்டிகை வெளிப்படுத்துகிறது என்று கூறியிருந்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், மக்கள் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...