அந்நிய செலாவணி மோசடி: கிலானிக்கு ரூ. 14 லட்சம் அபராதம்

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதற்காக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர் சையது அகமது ஷா கிலானிக்கு அமலாக்கத்
அந்நிய செலாவணி மோசடி: கிலானிக்கு ரூ. 14 லட்சம் அபராதம்


அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதற்காக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர் சையது அகமது ஷா கிலானிக்கு அமலாக்கத் துறை ரூ. 14. 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து கைப்பற்றிய ரூ. 6. 90 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்யவும்  உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், தெஹ்ரீக்-ஏ-ஹூரியத் கட்சியின் தலைவருமான சையது அலி ஷா கிலானியின் வீட்டில் கடந்த 2002-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய அனுமதி பெறாது அந்நிய செலாவணியை வீட்டில் வைத்திருப்பதாகக் கூறி,  ரூ. 6. 90 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதையடுத்து வருமான வரித்துறை அளித்த புகாரின் அடிப்படையில், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்(ஃபெமா) கீழ் கிலானி மீது  அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 20-ஆம் தேதி முடிவுற்றது. அதில் கிலானி சட்டவிரோதமாக அந்நிய செலாவணியைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தினை மீறிய குற்றத்துக்காக, கிலானிக்கு  ரூ. 14. 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சோதனையின்போது, கிலானியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 6. 90 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் மற்றொரு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மீதும் அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான விசாரணையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com