சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் நால்வர் விடுவிப்பு: பாகிஸ்தான் கண்டனம்

சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்பட 4 பேரை விடுவித்து இந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்


சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்பட 4 பேரை விடுவித்து இந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தில்லி - லாகூர் (பாகிஸ்தான்) இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வரும் சம்ஜௌதா விரைவு ரயிலில், கடந்த 2007-ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர். ஹரியாணா மாநிலம், பானிபட் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் ஆவர். இதுதொடர்பான வழக்கில் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்பட நால்வரையும் விடுவித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த சில சாட்சிகளிடம் விசாரணை நடத்தக் கோரி, அந்த நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், இந்திய நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அஸீமானந்தா உள்பட 4 பேர், 11 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சுவாமி அஸீமானந்தா, தனது குற்றத்தை ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில், இந்தியாவிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம்.
சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இந்திய நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம் என்றார் அவர்.
இதனிடையே, சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் வெளிப்படையான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது; சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இந்திய தூதர் அஜய் பைசாரியா தெளிவுபடுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கில் பாகிஸ்தான் தரப்பில் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படாததையும், சாட்சிகளை விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட சம்மன்களை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திருப்பி அனுப்பியதையும் அவர் சுட்டிக்
காட்டியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com