நீரவ் மோடியை விரைவில் நாடு கடத்திவர நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

பிரிட்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோடியை விரைவில் நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை
நீரவ் மோடியை விரைவில் நாடு கடத்திவர நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்


பிரிட்டனில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீரவ் மோடியை விரைவில் நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீரவ் மோடியைக் கைது செய்வதில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. சில சட்ட நடைமுறைகள் முடிவடைவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. அவை முடிந்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், அவரை விரைவில் நாடு கடத்திக் கொண்டு வருவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
இந்தியா, நியூயார்க், லண்டன், ஹாங்காங் என உலகின் பல்வேறு இடங்களில் வைர விற்பனைத் தொழிலை கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கிய தொழிலதிபர் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக, ரூ.13,000 கோடி வரை கடன் பெற்றார். பின்னர், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாமல், அவரும், அவருடைய மனைவி ஆமி மோடி, உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோரும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். இவர்களில், நீரவ் மோடி லண்டனில் உள்ளார்.
இதையடுத்து, நீரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. இந்தியாவில் உள்ள அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், லண்டனில் அவர் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக, அந்நாட்டின் தி டெலிகிராஃப் நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டன் அரசுக்கு அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, அவர் லண்டன் அதிகாரிகளால் கடந்த 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அவரை, வரும் 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com