பயங்கரவாதிகளை மன்னிப்பது எதிர்க்கட்சிகளின் இயல்பு: பிரதமர் மோடி

பயங்கரவாதிகளை மன்னிப்பதையே எதிர்க்கட்சிகள் இயல்பான பழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளை மன்னிப்பது எதிர்க்கட்சிகளின் இயல்பு: பிரதமர் மோடி


பயங்கரவாதிகளை மன்னிப்பதையே எதிர்க்கட்சிகள் இயல்பான பழக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஆயுதப்படைகளை அவர்கள் அவமானப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2008-இல் நடைபெற்ற மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காங்கிரஸ் அயலகப் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா கருத்து தெரிவிக்கையில், மும்பை தாக்குதலுக்குப் பிறகு, விமானப் படைத் தாக்குதல்கள் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்திருக்கலாம். ஆனால், என்னைப் பொருத்தவரையில் இந்த உலகை நாம் இப்படி அணுகக் கூடாது. யாரோ சிலர் வந்தார்கள்; எதையோ செய்தார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குற்றம்சாட்ட முடியாது என்று கூறியிருந்தார்.
அதேபோல், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேரை பலி வாங்கிய  பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் குறிப்பிடுகையில், அதை ஒரு சதிச்செயல் என்றும், வாக்குகளுக்காக வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
மோடி கண்டனம்: இந்த இருவரது கருத்துக்களையும் கண்டிக்கும் வகையில், மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சுட்டுரையில் பதிவுகளை வெளியிட்டார்.அதில், பயங்கரவாதிகளுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுப்பதை காங்கிரஸ் விரும்பாது என்பதை காங்கிரஸ் கட்சியினுடைய ராஜ வாரிசின் (ராகுல் காந்தி) உண்மையான விசுவாசி (சாம் பிட்ரோடா) ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்திய மக்களுக்கு இது ஏற்கெனவே தெரியும். 
ஆனால், இது புதிய இந்தியா. பயங்கரவாதிகளுக்கு புரியும் மொழியிலேயே நாங்கள் பதிலடி கொடுப்போம். 
நமது படைகளை எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒருமுறை கொச்சைப்படுத்தியிருக்கின்றன. அவர்களது கருத்து குறித்து நாட்டு மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏளனமான கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரை 130 கோடி மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவியுங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக இருக்கின்றது.
பயங்கரவாதிகளை மன்னிப்பதை எதிர்க்கட்சிகள் இயல்பான வழக்கமாகக் கொண்டுள்ளன. சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோபாலின் கண்டிக்கத்தக்க கருத்துக்கள், காஷ்மீரைப் பாதுகாப்பதற்காக உயிர்தியாகம் செய்தவர்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளன.  தியாகிகளின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் விதமாகவும் அது அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுக்கு அமித் ஷா கண்டனம்
சுட்டுரையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், எதிர்க்கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாகியுள்ளது. அவர்கள் நமது ராணுவத்தை சந்தேகிக்கின்றனர். நாங்கள் ராணுவத்தை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.
அவர்களது இதயத்துடிப்பு பயங்கரவாதிகளுக்கானது. எங்கள் இதயம் மூவர்ணக் கொடிக்காக துடிக்கிறது. இந்தத் தேர்தலில், வாக்கு என்னும் சக்தியைக் கொண்டு காங்கிரஸ் கட்சி மீது நாட்டு மக்கள் துல்லியத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com