பாஜக தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி லஞ்சம் கொடுத்தாரா எடியூரப்பா?: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

பாஜக மேலிடத் தலைவர்களுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுமார் ரூ.1,800 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு
பாஜக தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி லஞ்சம் கொடுத்தாரா எடியூரப்பா?: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்


பாஜக மேலிடத் தலைவர்களுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுமார் ரூ.1,800 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து லோக்பால் அமைப்பின் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கேரவன் பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டி, காங்கிரஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாஜக மேலிடத் தலைவர்களுக்கு எவ்வளவு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் அடங்கிய டைரி குறித்து பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பிரதமர் தொடங்கி அனைத்து பாஜக தலைவர்களும் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். அத்துடன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்பின் மூலம் விசாரிக்க தகுதியுடைய விவகாரமாகும்.
பாஜக தலைவர்கள் ரூ.1,800 கோடி லஞ்சம் வாங்கினார்களா, இல்லையா என்பது தொடர்பாக பிரதமர் மோடி தாமாக முன்வந்து தெளிவுபடுத்த வேண்டும். எடியூரப்பா கையெழுத்துடன் கூடிய அந்த டைரி, கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வருமான வரித் துறையினரின் வசம் உள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. லஞ்ச விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படாதது ஏன்? இது குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனுமதி வழங்கவில்லையா? அந்த டைரியை, பாஜக மேலிடத் தலைவர்களின் ஊழலுக்கு ஆதாரமாக கருத முடியாதா? என்று ரண்தீப் சுர்ஜேவாலா கேள்வியெழுப்பினார்.
மேலும், லஞ்ச விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவுக்கும், பாஜக தலைவர் ஒருவருக்கும் இடையே நடைபெற்றதாக கூறப்படும் உரையாடல் ஒன்றையும் செய்தியாளர்களிடம் சுர்ஜேவாலா வாசித்தார்.
எடியூரப்பா மறுப்பு: இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்திவிட்டனர். இதுதொடர்பான ஆவணங்களும் போலியானவை. மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற விரக்தியில், முடிந்துபோன ஒரு விஷயத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. அக்கட்சி மீது அவதூறு வழக்கு தொடருவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என்றார்.
பாஜக தலைவர்கள் ஊழல்வாதிகள்: பாஜக தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், பாஜகவின் அனைத்து சௌகிதார்களும் (பாதுகாவலர்கள்) திருடர்களே. நமோ (பிரதமரை குறிப்பிடுகிறார்), அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங்.... என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக மேலிடத் தலைவர்களுக்கு எடியூரப்பா லஞ்சம் கொடுத்ததாக வெளியான பத்திரிகை செய்தியையும் ராகுல் தனது பதிவுடன் இணைத்துள்ளார்.
அமித் ஷா பதிலடி: இதனிடையே, தாங்கள் எழுப்பிய போலியான விவகாரங்கள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டதால், இப்போது மோசடி வேலைகளில் மட்டுமே காங்கிரஸுக்கு நம்பிக்கை உள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், காங்கிரஸின் பிரசாரம், பேரழிவில் உள்ளது. மோசடி வேலைகள் கூட அவர்களை இனி காப்பாற்றாது என்று தெரிவித்துள்ளார்.

வருமான வரித் துறை விளக்கம்
பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வருமான வரித் துறை விளக்கமளித்துள்ளது.  எடியூரப்பாவால் எழுதப்பட்டது என்று வெளியாகியுள்ள டைரி விவரங்கள் சந்தேகத்துக்குரியவை என்றும், டைரியின் நகல்கள்தான் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017, ஆகஸ்டில் வருமான வரி ஏய்ப்பு புகாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.டி.சிவக்குமார் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு டைரி பக்கங்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டன. அவை, 2009ஆம் ஆண்டைய கர்நாடக சட்டப் பேரவை டைரியின் நகல்களாகும். அவற்றில் சில எண்களும், சில தனிநபர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அவை, எடியூரப்பாவால் எழுதப்பட்டது என்றும், பாஜக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சப் பணத்தை அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கே.டி.சிவக்குமார் கூறினார். அந்த நகல்கள், தடயவியல் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. எனினும், அந்த சோதனைக்கு உண்மையான பக்கங்கள் தேவைப்பட்டன. அவை எங்களிடம் இல்லை. அவற்றை, சிவக்குமாரும் அளிக்கவில்லை. அந்த நகல்கள் எங்கிருந்து கிடைத்தன, இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்விகளுக்கும் அவர் உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com