மோடியால் இந்தியாவுடனான நல்லுறவு தழைத்தோங்கியது: அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான நல்லுறவு தழைத்தோங்கியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மோடியால் இந்தியாவுடனான நல்லுறவு தழைத்தோங்கியது: அமெரிக்கா


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான நல்லுறவு தழைத்தோங்கியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள எந்தவொரு அரசுடனும் நட்புறவைப் பேண அமெரிக்கா ஆவலாக இருக்கிறது என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நேரடி நிர்வாகக் குழுவில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரலாற்றிலேயே முதல்முறையாக, இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தில்லியில் கடந்த ஆண்டு நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியதையும், அதைத்தொடர்ந்து இருநாட்டு நட்புறவு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 5 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இந்தியாவுடனான நல்லுறவு எப்படி இருந்தது? இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலேவின் சமீபத்திய அமெரிக்கப் பயணம் எப்படி அமைந்தது? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அந்த அதிகாரி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு தழைத்தோங்கியுள்ளது. மிகவும் குறிப்பாக நான் சொல்ல விரும்புவது, கடந்த 2017 ஜூனில் பிரமதர் மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருகை புரிந்தது குறித்துதான். அவரது அந்தப் பயணத்தால் இருநாட்டு நட்புறவில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 
அதே சமயம், விஜய் கோகலேவின் பயணம் என்பது,  இருநாடுகளுக்கு இடையேயான சாதகமான பயணத்தில் நிகழ்ந்த சமீபத்திய உதாரணம்தான். 
இந்திய பொதுத்தேர்தலில் யார் தேர்வு செய்யப்பட்டாலும் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே, அங்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். 
இதுகுறித்து, டிரம்ப் நிர்வாக மூத்த அதிகாரி குறிப்பிடுகையில், இரு நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியம் குறித்த கண்ணோட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது என்றார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூழல் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com