யாசீன் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை: மத்திய அரசு நடவடிக்கை

பிரிவினைவாதத் தலைவர் யாசீன் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்புக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
பிரிவினைவாதத் தலைவர் யாசீன் மாலிக்.
பிரிவினைவாதத் தலைவர் யாசீன் மாலிக்.


பிரிவினைவாதத் தலைவர் யாசீன் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்புக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாசீன் மாலிக் அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் ராஜீவ் கௌபா கூறியதாவது:
யாசீன் மாலிக்கின் அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் செழிக்க ஆதரவளிக்கிறது. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. 
எனவே, ஜேகேஎல்எப் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேகேஎல்எப் அமைப்பு, பிரிவினைவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டில் காஷ்மீர் பண்டிட்டுகளை படுகொலை செய்ததில் இந்த அமைப்புக்கு பங்கு உண்டு. அதன் தொடர்ச்சியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு பண்டிட்டுகள் வெளியேறினார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சதித்திட்டம் தீட்டியவர் யாசீன் மாலிக்.
ஜேகேஎல்எப் அமைப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த அமானுல்லா கான் கடந்த 1970ஆம் ஆண்டு பிரிட்டனின் பர்மிங்ஹாமில் தொடங்கினார்.
ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 1971ஆம் ஆண்டு கடத்தியபோது இந்த அமைப்பு கவனம் பெற்றது. ஜம்மு-காஷ்மீர் காவல் துறை இந்த அமைப்புக்கு எதிராக 37 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
பிரிட்டனில் இந்திய தூதரக அதிகாரி ரவீந்திர மாத்ரேவை கடந்த 1984ஆம் ஆண்டில் கடத்தி கொலை செய்ததில் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஜேகேஎல்எப் அமைப்பைச் சேர்ந்த மக்பூல் பட் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சில பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். 
தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கும், சதி செயல்களில் ஈடுபடுவோருக்கும் ஜேகேஎல்எப் அமைப்பு நிதியுதவி அளித்து வருகிறது என்றார் ராஜீவ் கௌபா.
யாசீன் மாலிக், ஜம்முவில் உள்ள கோத் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 4 வீரர்களை சுட்டுக் கொன்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபய்யா சயீதை கடத்திய வழக்கில் யாசீன் மாலிக் விசாரணையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
முன்னதாக,  ஜமாத்-ஏ-இஸ்லாமி ஜம்மு-காஷ்மீர் என்ற அமைப்பை அண்மையில் மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மெஹபூபா கேள்வி
ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் மத்திய அரசு என்ன சாதிக்கப் போகிறது? என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், யாசீன் மாலிக் எப்போதோ வன்முறை பாதையைத் துறந்துவிட்டார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு யாசீன் மாலிக்கும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.


புல்வாமா தாக்குதலுக்கு சதி: பயங்கரவாதி கைது


புல்வாமா தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி முதாஸிர் கானின் நெருங்கிய கூட்டாளி சஜ்ஜத் அகமது கானை (27) தில்லியில் சிறப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். இவரும் புல்வாமா தாக்குதல் சம்பவ சதித் திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைதான சஜ்ஜத் கான் மீது தேசிய புலனாய்வு அமைப்பும் வழக்குப் பதிவு செய்திருந்தது.
புல்வாமா சம்பவம்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகம்மது (ஜெஏஎம்) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் தர், வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை, துணை ராணுவப் படையினர் சென்ற பேருந்துகள் மீது மோதச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தில்லியில் காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் ஜெஏஎம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சஜ்ஜத் கானை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹ் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: 
புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு, அச்சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட முதாஸிர் கான் அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஜெஏஎம் பயங்கரவாதி, ஸ்லீப்பர் செல்லை அமைப்பதற்காக துணி விற்கும் நபராக மாறுவேடத்தில் தில்லியில் தங்கியிருப்பதாக உளவு அமைப்பிடம் இருந்து ரகசியத் தகவல் கிடைத்தது. தில்லி செங்கோட்டைப் பகுதி சிவப்பு விளக்கு அருகே வியாழக்கிழமை வந்த சஜ்ஜத் அகமது கானை போலீஸார் மடக்கி பிடித்தனர். 
நெருங்கிய கூட்டாளி: புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்கு முன்னும், அதற்குப் பிறகும் இச்சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட முதாஸிருடன் சஜ்ஜத் கான் தொடர்பில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவத்தன்று சஜ்ஜத் கானை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் ஆப்) முதாஸிர் தொடர்பு கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தெரிவித்துள்ளார். மேலும், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய அடில் தர் குறித்த விடியோவையும் சஜ்ஜத்திற்கு அவர் அனுப்பியுள்ளார். பின்னர் அதை தனது செல்லிடப்பேசியில் இருந்து சஜ்ஜத் அழித்துவிட்டார்.
தில்லியில் ஸ்லீப்பர் செல்லை ஏற்படுத்தும் பணியை சஜ்ஜத் கானுக்கு முதாஸிர் ஒப்படைத்தார். முக்கியத் தாக்குதல் இலக்குகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக சஜ்ஜத் தில்லிக்கு அனுப்பப்பட்டார். தில்லியில் பதுங்குமிடத்தை ஏற்படுத்தவும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாத செயல்களுக்கு தேர்ந்தெடுக்கும் பணியை மேற்கொள்ளவும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி, வெடிபொருள்களைத் தயாரிப்பது, கையாளுவது, ஆயுதங்களைச் சேகரிப்பது, நிதி திரட்டுவது ஆகிய பொறுப்புகளும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், தீவிரவாதத் தாக்குதலுக்காக காஷ்மீர் இளைஞர்களைக் கண்டறியவும் சஜ்ஜத்துக்கு முதாஸிர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் கட்போரா பகுதியைச் சேர்ந்த பிலால், திராலில் உள்ள மிதுரா பகுதியைச் சேர்ந்த தன்வீர்ஆகிய இருவரையும் தேர்ந்தெடுத்து அவர்களை தீவிரவாதச் செயல்களில் ஈடுபட சஜ்ஜத் ஊக்குவித்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் குஷ்வாஹ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com