பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தானின் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில், அந்நாட்டுக்கு "காதல் கடிதங்கள்' எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தானின் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில், அந்நாட்டுக்கு "காதல் கடிதங்கள்' எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்குக் கடிதம் எழுதிவந்தார். 
அப்போது, குஜராத் முதல்வராக இருந்த மோடி, காங்கிரஸ் அரசு பாகிஸ்தானுக்கு "காதல் கடிதங்கள்' எழுதி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். தற்போது, காங்கிரஸ் அதற்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியைத் தனி நாடாக அறிவிக்கக் கோரும் லாகூர் தீர்மானம், 1940-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 23-ஆம் தேதியை "தேசிய தினம்' ஆக பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், "பாகிஸ்தானின் தேசிய தினத்தையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
இந்தச் சமயத்தில், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும், பயங்கரவாதமற்ற, வன்முறைகளற்ற, அமைதியான, வளர்ச்சிப் பாதையில் பயணிக்க ஒன்றிணைந்து செயலாற்றுவோம்' என்று குறிப்பிட்
டிருந்தார். 
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ""பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானுக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தை, நாட்டின் காவலர் (பிரதமர் மோடி) மறைத்துள்ளார். 
அந்தக் கடிதத்தில், பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவது குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை. இதுபோன்று "காதல் கடிதங்கள்' எழுதுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com