பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக அத்வானி என்றும் நிலைப்பார்

"பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக எல்.கே. அத்வானி என்றென்றும் நிலைத்திருப்பார்' என்று சிவசேனை கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.
பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக அத்வானி என்றும் நிலைப்பார்

"பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக எல்.கே. அத்வானி என்றென்றும் நிலைத்திருப்பார்' என்று சிவசேனை கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா'வில் சனிக்கிழமை வெளியிட்ட தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்திய அரசியலின் "பீஷ்மர்' ஆக விளங்குபவர், லால் கிருஷ்ண அத்வானி. அவரது பெயர் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது, ஆச்சரியத்தைத் தரவில்லை. குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் இருந்து 6 முறை மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்தொகுதியில், தற்போது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார். இதன்மூலம், அத்வானிக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
பாஜக கட்சியை நிறுவியவர்களில் அத்வானியும் ஒருவர். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து, பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் முக்கியப் பங்காற்றினார். ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எந்தவிதப் பணியும் வழங்கப்படாது என்ற சூழல் தற்போது உருவாகி வருகிறது.
அத்வானியை அவமதித்துவிட்டு, அமித் ஷாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. அடுத்தவர்களை அவமதிப்பது குறித்து, காங்கிரஸ் பேசக்கூடாது. ஏனெனில், காங்கிரஸ் ஆட்சி இக்கட்டான சூழலில் தவித்தபோது, அதனைக் கரை சேர்த்தவர் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ். ஆனால், அவரது இறப்புக்குப் பிறகும், காங்கிரஸ் கட்சி அவரை அவமதித்து வந்தது.  
இந்திய அரசியலில் வெகுகாலம் கோலோச்சியவர் அத்வானி. பாஜவை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியதில், அவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. அவரது தலைமையில் அயோத்தியில் 1990களில் நடைபெற்ற "ரத யாத்திரை' காரணமாகவே, பாஜக உயர்ந்த நிலையை அடைந்தது. அவரது கடின உழைப்பின் பலன்களையே, பாஜக தற்போது அனுபவித்து வருகிறது. பாஜகவின் மதிப்புமிக்க தலைவராக அத்வானி என்றென்றும் நிலைத்து நிற்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com