பாதுகாப்பு படையினரை விமர்சிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி: மத்திய அமைச்சர் நக்வி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியை ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விமர்சித்த காங்கிரஸ் கட்சியினர், இப்போது  பாதுகாப்பு படையினரை அதேபோல விமர்சித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
பாதுகாப்பு படையினரை விமர்சிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி: மத்திய அமைச்சர் நக்வி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியை ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விமர்சித்த காங்கிரஸ் கட்சியினர், இப்போது  பாதுகாப்பு படையினரை அதேபோல விமர்சித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசகருமான சாம் பிட்ரோடா கேள்வியெழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலடி தரும் வகையில், மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பொய்யான தகவல்களைக் கொண்டு நாட்டின் அமைதியை குலைக்கவும், பாதுகாப்பில் பிரச்னையை ஏற்படுத்தவும் தினமும் இங்கு பலர் முயற்சிக்கின்றனர். நம் நாட்டில் தினமும் அரசியல் போட்டி நிலவுகிறது. நாட்டின் தைரியமிக்க பாதுகாப்பு படையினரை விமர்சித்ததற்காக, மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். பயங்கரவாதிகள் இறந்ததற்கு காங்கிரஸ் கட்சி வருத்தப்படுகிறது.
பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது, கேள்வியெழுப்புவது உள்ளிட்டவற்றால், பாகிஸ்தானுடன் காங்கிரஸ் எந்த அளவுக்கு கூட்டணியுடன் செயல்படுகிறது என்பது தெரிய வருகிறது. முன்பு, பிரதமர் மோடியை ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தனர். இப்போது, பாதுகாப்பு படையினரை அதேபோல விமர்சிக்கின்றனர் என்று கூறினார்.
இதனிடையே, சாம் பிட்ரோடா கருத்து குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவிடம் கேட்டபோது, "ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. அதற்கும் காங்கிரஸூக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்றார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது விமானப் படை மூலமாக இந்தியா தாக்குதல் நடத்தியது. 
அந்த தாக்குதலுக்கு ஆதாரம் வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com