ராகுல் காந்தி கேரளத்திலும் போட்டி?

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்திலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி கேரளத்திலும் போட்டி?

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்திலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், தோல்வி பயம் காரணமாகவே, அவர் இரு தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக, பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விமர்சித்துள்ளன.
மக்களவைக்கு வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலில், ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான அமேதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த மாநிலத்தில், பகுஜன் சமாஜ் - சமாஜவாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அந்தக் கூட்டணி சேர்த்துக் கொள்ளவில்லை. எனினும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்துள்ளது.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு, அதே தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவர் மீண்டும் அங்கு களமிறங்குகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி, கேரளத்தில் இருந்தும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அவர் கேரளத்தில் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அவற்றில், வயநாடு, வடகரை ஆகிய இரு தொகுதிகளைத் தவிர 14 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அவற்றில், வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகமுள்ள தொகுதியாகும்.
இந்நிலையில், ராகுல் காந்தி, கேரளத்தில் ஏதாவது ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி. குஞ்ஞாலிக் குட்டி, கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவர் ஜோஸ் கே. மாணி உள்ளிட்டோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான உம்மன் சாண்டி, பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
வரும் மக்களவைத் தேர்தலில், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர், நல்ல பதிலை தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறோம் என்றார்.
இதேபோல், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கோட்டயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
அண்மையில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைக்க கேரளம் வந்தபோது, வயநாடு தொகுதியில் போட்டியிடுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதுதொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியிடமும் விவாதித்திருக்கிறோம். தற்போது மீண்டும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுக்கிறோம். அவர் வட இந்தியாவில் மட்டுமன்றி தென்னிந்தியாவிலும் போட்டியிடுவது, தேசிய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும் என்றார் ரமேஷ் சென்னிதலா. 
ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிடுவது, தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும், தென்னிந்தியாவில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட கோழிக்கோடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.சித்திக்கின் பெயர் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவரும் அந்தத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கூறிவிட்டார்.
இதற்கு முன்பு, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய மாநிலங்களில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு, கேரளத்தில் இருந்து அந்த கோரிக்கை எழுந்தது.
மார்க்சிஸ்ட் விமர்சனம்: இதனிடையே, தோல்வி பயம் காரணமாகவே, ராகுல் காந்தி இரு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக, கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளத்தில் மிகப்பெரிய சக்தியாக இருக்கும் இடதுசாரி கூட்டணிக்கு எதிராகவே ராகுல் காந்தி களமிறங்கவுள்ளார். பாஜகவை எதிர்த்து அல்ல' என்றார்.
பாஜக தாக்கு: இதேபோல், மிúஸாரம் மாநில முன்னாள் ஆளுநரும், திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளருமான கும்மனம் ராஜசேகரனும், ராகுல் காந்தி இரு தொகுதியில் போட்டியிடுவதை விமர்சித்துள்ளார். "அமேதியில் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் காரணமாகவே, மிகவும் பாதுகாப்பான வயநாடு தொகுதியைத் தேர்ந்தெடுத்து ராகுல் காந்தி போட்டியிடவுள்ளார்' என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com