ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி: 21 நாடுகளுக்கு கடிதம் அனுப்ப அமலாக்க துறைக்கு நீதிமன்றம் அனுமதி

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கியில் ரூ.8,100 கோடி மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற 21 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்ப  அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி
ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி: 21 நாடுகளுக்கு கடிதம் அனுப்ப அமலாக்க துறைக்கு நீதிமன்றம் அனுமதி

ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கியில் ரூ.8,100 கோடி மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற 21 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்ப  அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
குஜராத் மாநிலம், வதோதராவில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆந்திர வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து ரூ.8,100 கோடி கடன் வாங்கியது. ஆனால், அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், அது வாராக் கடனாக மாறியது. 
மேலும், வங்கியில் இருந்து கடன் பெறுவதற்காக, அந்த நிறுவனம் வரவு-செலவு கணக்கை அதிகரித்துக் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடிக்கு ஆந்திர வங்கியின் உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குநர்கள் சேதன் ஜெயந்திலால் சந்தேஸரா, நிதின் ஜெயந்திலால் சந்தேஸரா, தீப்தி சேதன், ஹிதேஷ் நரேந்திர படேல் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி விட்டனர்.
இந்த மோசடி சம்பந்தமாக, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், ஆடிட்டர்கள் ஆகியோருக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.
இந்த நிலையில்,  இந்த வங்கி கடன் மோசடி தொடர்பான விசாரணைக்கு உதவியான தகவல்களைப் பெற 21 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்ப அனுமதிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனுத் தாக்கல் செய்திருந்தது. 
இந்த மனு, தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சதீஷ் குமார் அரோரா முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது, இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா, சீனா, பனாமா மற்றும் ஆஸ்திரியா நாடுகளின் உதவியைப் பெறும் வகையில் கடிதங்களை அனுப்ப அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நாடுகளைத் தவிர, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, ஹாங்காங்க், இந்தோனேசியா, பார்படோஸ், பெர்முடா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், சைப்ரஸ், காமரோஸ், ஜெர்ஸி, லிச்டென்ஸ்டெய்ன், மோரீஷஸ், நைஜீரியா, செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமலாக்கத் துறை வழக்குரைஞர் ஆர் ஆதித்யா தெரிவித்தார்.       
இந்த வழக்கு விசாரணையின்போது, ஸ்டெர்லிங் பயோ டெக் இயக்குநர்களான நிதின் சந்தேசரா மற்றும் சேட்டன்குமார் சந்தேசரா அல்போனியா குடியுரிமை பெற்றுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நிதேஷ் ரானா நீதிமன்றத்திடம் தெரிவித்தார். அதையடுத்து, அல்போனியாவுக்கும் கடிதத்தை அனுப்ப நீதிமன்றம் அனுமதியளித்தது.
ஸ்டெர்லிங் பயோடெக் இயக்குநர்களில் ஒருவரான ஹிதேஷ் நரேந்தர் பாய் படேல் அல்பேனியாவில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்தியாவுக்கு விரைவில் அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com