வருமான ஆதரவு திட்டம்: 4.74 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரலில் இரண்டாவது தவணை

விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ், சுமார் 4.74 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான இரண்டாவது தவணை உதவித்தொகை, அடுத்த மாதம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி
வருமான ஆதரவு திட்டம்: 4.74 கோடி விவசாயிகளுக்கு ஏப்ரலில் இரண்டாவது தவணை

விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டத்தின் (பிஎம்-கிசான்) கீழ், சுமார் 4.74 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான இரண்டாவது தவணை உதவித்தொகை, அடுத்த மாதம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, 1.01 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனால், விவசாயிகளுக்கான உதவித்தொகையை வழங்குவதில் தடை ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ், மார்ச் 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, முதல் மற்றும் இரண்டாவது தவணைகளை வழங்க மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுவரை 2.74 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் முதல் தவணை வழங்கப்படும்.
நாட்டிலுள்ள 12 கோடி விவசாயிகளின் தகவல்களைத் திரட்ட மத்திய அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், 4.74 கோடி விவசாயிகளின் தகவல்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான இரண்டாவது தவணை அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com