தேர்தலில் போட்டி இல்லையா? அத்வானிதான் தெளிவுபடுத்த வேண்டும்

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காந்திநகர் தொகுதி வேட்பாளராக, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவிக்கப்பட்டதையடுத்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அத்வானிதான் பதிலளிக்க வேண்டும்; அவர் கருத்து
தேர்தலில் போட்டி இல்லையா? அத்வானிதான் தெளிவுபடுத்த வேண்டும்

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காந்திநகர் தொகுதி வேட்பாளராக, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவிக்கப்பட்டதையடுத்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அத்வானிதான் பதிலளிக்க வேண்டும்; அவர் கருத்து கூறுவதே சரியானது என்று பாஜக துணைத் தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி கூறினார்.
குஜராத் மாநிலம், காந்தி நகர் மக்களவைத் தொகுதியில், கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து அத்வானி வெற்றி பெற்று வந்துள்ளார். ஆனால், இந்த முறை அந்த தொகுதி வேட்பாளராக அமித் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இதுவரை வெளியிடப்பட்ட பாஜகவின் வேட்பாளர் பட்டியல்களில் அத்வானியின் பெயர் இடம்பெறவில்லை. அத்வானிக்கு 91 வயது ஆகிறது.
இதேபோல், 80 வயதுக்கு மேற்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் சாந்த குமார், பி.சி. கந்தூரி, கரியமுண்டா ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை. இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், இளம் தலைவர்களை களமிறக்க வேண்டும் என்ற மோடி-அமித் ஷா வியூகத்தின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. எனினும், இந்த விவகாரத்தில் அத்வானி இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், காந்தி நகரில் அமித் ஷா போட்டியிடுவது தொடர்பாக உமா பாரதியிடம் செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கேள்வியெழுப்பினர். அவர் அளித்த பதில்:
இந்த விஷயத்தில் கருத்து கூறுவதற்கு சரியான நபர் அத்வானி மட்டுமே. அதுவே முறையானது. நான் உள்பட வேறு யாரும் கருத்து கூறுவது முறையாக இருக்காது. பாஜகவை வளர்ச்சியடையச் செய்து, தற்போதைய இடத்துக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் அத்வானி. தேர்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் அவரது மதிப்பு குறைந்துவிடாது.
பாஜகவை பொருத்தவரை, குறிப்பிட்ட வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என எந்த கொள்கையும் இல்லை. இந்த தேர்தலில், சில இளம் எம்.பி.க்களுக்கு கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நாட்டுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் பிரதமர் மோடி ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார் உமா பாரதி.
59 வயதாகும் உமா பாரதி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவர், கட்சியின் துணைத் தலைவராக கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com