பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம்: சுஷ்மா ஸ்வராஜ் கவலை

பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இரு ஹிந்து சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம்: சுஷ்மா ஸ்வராஜ் கவலை

பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இரு ஹிந்து சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையின்போது 2 ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, அங்குள்ள இந்தியத் தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அமைச்சர் எதிர்ப்பு: சுஷ்மா ஸ்வராஜின் இந்த சுட்டுரைப் பதிவுக்கு, பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவத் ஹுசைன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "ஹிந்து சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினரைப் பற்றி கவலைப்பட்டால் போதும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "சிறுபான்மையினர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து விளக்கம் மட்டும்தான் கேட்டேன். இந்தக் கேள்வியைக் கண்டு பாகிஸ்தான் அமைச்சர் அஞ்சுவது, அவர்களது குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது' என்று விமர்சித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு: 2 ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். அந்த நாட்டு தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவத் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கொடியில் உள்ள வெள்ளை நிறம், சிறுபான்மையினரைக் குறிப்பதாகவும், அத்தகைய சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பது தங்களது கடமை எனவும் அவர் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 13 மற்றும் 15 வயது கொண்ட இரு ஹிந்து சிறுமிகள் ஹோலி தினத்தன்று கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டு ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com