கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரம்: அதிர்ச்சியளிக்கும் சிபிஐ தகவல்கள்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையரிடம் நடத்திய விசாரணை குறித்து சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
கொல்கத்தா காவல் ஆணையர் விவகாரம்: அதிர்ச்சியளிக்கும் சிபிஐ தகவல்கள்


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் நடத்திய விசாரணை குறித்து சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்க தலைமை செயலர், காவல்துறை இயக்குநர் மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து  வந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், இந்த விசாரணை இருதரப்புக்கும் பொதுவான இடமாக மேகாலயாவில் நடைபெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ விசாரணைக்கும் ராஜீவ் குமார் ஆஜரானார். 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் முன் அந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்தது குறித்து மார்ச் 26-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மார்ச் 26-ஆம் (இன்று) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

அதன்படி, இந்த வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் தெரிவிக்கையில், சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில், அதிர்ச்சிகரமான உண்மை தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது என்றது. 

இந்த அறிக்கையை சிபிஐ சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளதால், எதிர்தரப்பு வாதத்தை கேட்காமல் தற்போது இதுகுறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக தகுந்த நிவாரணத்தை கேட்டு மனு தாக்கல் செய்யுமாறும் சிபிஐயிடம் தெரிவித்தது. 

இந்த மனுவை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த 7 தினங்களுக்குள் ராஜீவ் குமார் உள்ளிட்டவர்கள் இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும். 

முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐ வசம் வருவதற்கு முன் விசாரித்து வந்த எஸ்ஐடியின் தலைவரான ராஜீவ் குமாரை (தற்போது கொல்கத்தா காவல் ஆணையர்) விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. எனினும், ராஜீவ் குமார் ஆஜராகாத காரணத்தால் சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு சென்றனர். ஆனால், சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு அனுமதிக்கப்படாமல் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த விவகாரம் அப்போது நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்னையாக பேசப்பட்டது. இந்த விவகாரத்தில் தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநிலத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com