கட்கரி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்

மகாராஷ்டிர மாநிலத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் உள்ளிட்டோர் மக்களவைத் தேர்தலுக்காக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், புணே தொகுதியில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் நிதின் கட்கரி. உடன் முதல்வர் ஃபட்னவீஸ்.
மகாராஷ்டிர மாநிலம், புணே தொகுதியில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் நிதின் கட்கரி. உடன் முதல்வர் ஃபட்னவீஸ்.


மகாராஷ்டிர மாநிலத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவாண் உள்ளிட்டோர் மக்களவைத் தேர்தலுக்காக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நாகபுரி தொகுதியில் போட்டியிடும் நிதின் கட்கரி, வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளால் மத்திய அரசு மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன். தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டதை விட அதிகமான வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.
அவர் தவிர்த்து, ராம்டெக் தொகுதியின் தற்போதைய எம்.பி. யான சிவசேனைக் கட்சியின் கிருபால் துமானேவும் மனு தாக்கல் செய்தார். அதேபோல், கட்கரியை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் நானா படோல், கிருபாலை எதிர்க்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிஷோர் கஜ்பியே ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
அதேபோல், நாந்தேட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் காணும் முன்னாள் முதல்வர் அசோக் சவாணும் வேட்புமனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிரத்தில் மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதாகக் கூறிய அவர், நாந்தேட் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறினார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவரான மாணிக்ராவ் தாக்கரே, யவத்மால் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அம்பேத்கர் பேரனும், பாரிப் பகுஜன் மஹாசங் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர், சோலாபூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
உ.பி.யில்... உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவர் செளதரி அஜித் சிங், முஸாஃபர்நகர் தொகுதியில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான சஞ்ஜீவ் பல்யான் களம் காணும் நிலையில், காங்கிரஸ் அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.
காஷ்மீரில்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com