தும்கூரு மக்களவைத் தொகுதியில் தேவெ கெளடா வேட்புமனு தாக்கல்: காங்கிரஸ் போட்டி வேட்பாளரும் மனு தாக்கல்

கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட தும்கூரு மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட தேவெ கெளடா (85)  வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல்,  தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால்,
தும்கூரு மக்களவைத் தொகுதியில் தேவெ கெளடா வேட்புமனு தாக்கல்: காங்கிரஸ் போட்டி வேட்பாளரும் மனு தாக்கல்


கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட தும்கூரு மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட தேவெ கெளடா (85)  வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல்,  தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால்,   அதிருப்தி அடைந்துள்ள மக்களவை உறுப்பினர் முத்தனுமே கெளடாவும் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.
மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா, தான் இதுவரை போட்டியிட்டு வந்த ஹாசன் மக்களவைத் தொகுதியை தனது பேரன் பிரஜ்வலுக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.  இதைத் தொடர்ந்து,  தும்கூரு தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவெ கௌடா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்ட காங்கிரஸ்,  மஜத தலைவர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக,  ஹாசன் மாவட்டத்தின் ஹொளேநரசிபுரா நகரில் உள்ள லட்சுமிநரசிம்மா கோயிலுக்கு மகன் எச்.டி.ரேவண்ணா,  மருமகள் பவானியுடன் சென்ற தேவெ கெளடா, அங்கு சிறப்புப் பூஜை செய்து தரிசனம் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் தேவெ கெளடா செய்தியாளர்களிடம் கூறியது:-
பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ்,  மஜத தொண்டர்கள் ஒன்றுபட்டு தேர்தல் பணியாற்றவேண்டும்.  கடந்த காலங்களில் நிலவிய கருத்து மோதல்களை இரு கட்சியினரும் மறந்து விட வேண்டும்.  மக்களவைத் தேர்தலையும் ஒன்றிணைந்து சந்திப்போம்.   சிறிய பிரச்னைகளை பூதாகரமாக்கி காட்டுவதை பொய்யாக்கி காட்டி,  28 மக்களவைத் தொகுதிகளிலும் மஜத- காங்கிரஸ் ஒன்றுபட்டு வென்று காட்டுவோம் என்றார்.
போட்டி வேட்பாளர் மனு தாக்கல்: இதனிடையே,  தும்கூரு தொகுதியை மஜதவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி. முத்தனுமே கெளடா, திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தும்கூரு எம்.பி.யாக இருந்து கொண்டு வடபெங்களூரு தொகுதியில் போட்டியிடச் சொன்னால் எப்படி முடியும்?  வேறு எங்கும் போட்டியிடும் உரிமையில்லை.  அதைச் செய்யவும் கூடாது.  எங்கு வேண்டுமானாலும் போட்டியிட நான் ஒன்றும் பெரிய தலைவரல்ல. 
வேட்பு மனு தாக்கலுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.  எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.  அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.  செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை நல்ல பதிலுக்காக காத்திருப்பேன் என்றார்.
இதனிடையே,  காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கே.என்.ராஜண்ணாவும் தும்கூருமக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 
பிரச்னைக்கு காரணம் என்ன?:
தும்கூரு தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜி.எஸ்.பசவராஜ் நிறுத்தப்பட்டுள்ளார்.   காங்கிரஸ்- மஜத கூட்டணியில் தும்கூரு தொகுதி மஜதவுக்கு ஒதுக்கப்பட்டதால்,   காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர்.  தேவெ கெளடா போட்டியிடாவிட்டால், தும்கூரு தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுத்தரும்படி துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்திருந்தார். 
இருப்பினும், மஜத, மைசூரு தொகுதியைக் கேட்டதாகவும், சொந்த தொகுதி என்பதால், அதை விட்டுத்தர முன்னாள் முதல்வர் சித்தராமையா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.  இதனால் காங்கிரஸைச் சேர்ந்த முத்தனுமே கெளடா எம்.பி.யாக உள்ள தும்கூருவை மஜதவுக்கு ஒதுக்கியதாகத் தெரிகிறது. காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முத்தனுமே கெளடா போட்டியிடுவதால், அது மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் தலைவலியாக பரிணமித்துள்ளது.  
இதேபோல,  மண்டியா, ஹாசன்,  வட கன்னடம்,  உடுப்பி ஆகிய தொகுதிகளை ம.ஜ.த.வுக்கு விட்டுக் கொடுத்ததற்கும் அத் தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  இது கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com