பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிய பாஜக: பணமதிப்பிழப்பு குறித்த எதிர்கட்சிகள் செய்தியாளர் சந்திப்பில் விடியோ வெளியீடு

பணமதிப்பிழப்பு சமயத்தில் அகமதாபாத் பாஜக நிர்வாகி ஒருவர் குறிப்பிட்ட தொகைக்கான தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டினை மாற்றிக்கொண்டிருந்த விடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிய பாஜக: பணமதிப்பிழப்பு குறித்த எதிர்கட்சிகள் செய்தியாளர் சந்திப்பில் விடியோ வெளியீடு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்த்து எதிர்கட்சிகள் தில்லி கான்ஸ்டிட்யூஷனல் க்ளப்பில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்தன. இந்த கூட்டத்தில் ஷரத் யாதவ், ஹேமந்த் சோரன், மனோஜ் ஜா, அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர்.

அப்போது பணமதிப்பிழப்பு சமயத்தில் அகமதாபாத் பாஜக நிர்வாகி ஒருவர் குறிப்பிட்ட தொகைக்கான தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டினை மாற்றிக்கொண்டிருந்த விடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் பேசியதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பாஜக-வின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. இதனால் அக்கட்சி அதிகளவில் லாபம் அடைந்துள்ளது. மத்திய மோடி அரசு மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டது. அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து துறைகளையும் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்துக்கொண்டுள்ளது. இந்த விடியோ பதிவை பார்த்த பின்னர், யார் திருடன் - யார் காவலன், யார் தேச பக்தர் - யார் தேச விரோதி என்பது புரிந்திருக்கும் என்றார்.

இதையடுத்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், நமது தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலகோடி இளைஞர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று தெரிவித்தார். 

இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அனைத்து எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி ஆளும் பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com