Enable Javscript for better performance
மோடி வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியீட்டுக்கு தடை கோரிய வழக்கு: 29-ஆம் தேதி விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    மோடி வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியீட்டுக்கு தடை கோரிய வழக்கு: 29-ஆம் தேதி விசாரணை

    By DIN  |   Published on : 27th March 2019 06:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Modi_Film_Ban


    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியீட்டுக்கு தடை கோரிய வழக்கை 29-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மும்பை உயர்நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தெரிவித்தது. 

    பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'பிஎம் நரேந்திர மோடி'. இந்த படம் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம், மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 

    இந்த படம் வாக்குப்பதிவுக்கு 6 தினங்கள் முன்பு வெளியாவதால், வாக்காளர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், புணேவை சேர்ந்த அரசியல் ஆர்வலர் சதீஷ் சர்கிவ் கைக்வாத் கடந்த மார்ச் 25-ஆம் தேதி இந்த படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

    அவர் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது இந்த படத்தை வெளியிடுவது அரசு குடிமகனுக்கு வழங்கியுள்ள வாக்குரிமையில் தலையிடும் செயல் ஆகும். இந்த படத்தில் உள்ள கருத்து, ஒரு வாக்காளனை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிப்பதற்கு தூண்டலாம். இது ஆரோக்கியமான தேர்தல் நடைமுறையை பாதிக்கும் செயல் ஆகும். சமூக வலைதளங்களில் இருந்தும் இந்த படத்தின் டிரெய்லரை அகற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    இதையடுத்து, இந்த வழக்கை மார்ச் 29-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மும்பை உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்தது.  

    இதனிடையே, இந்த படத்தின் வெளியீட்டை தாமதப்படுத்த கோரி காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த 25-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து, இந்த படத்தின் 4 தயாரிப்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai