2ஜி வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரக்கன்றுகள் நடாதவரை விசாரணை இல்லை: தில்லி உயர்நீதிமன்றம்

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாதவரை வழக்கின் விசாரணையை தொடர முடியாது என்று செவ்வாய்க்கிழமை
2ஜி வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரக்கன்றுகள் நடாதவரை விசாரணை இல்லை: தில்லி உயர்நீதிமன்றம்


2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரக்கன்றுகளை நடுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாதவரை வழக்கின் விசாரணையை தொடர முடியாது என்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த உயர்நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி நாஜ்மி வஜீரி அமர்வில் பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த சாஹித் உஸ்மான் பல்வா, குசேகான் நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால், டிபி ரியாலிட்டி நிறுவனம் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்தக் கால அவகாசம் கோரிய ஒவ்வொரு எதிர்மனுதாரர்கள் சார்பிலும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட வேண்டும். ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா 300 மரக்கன்றுகள், குசேகான் நிறுவனத்தின் நிறுவனர் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகிய இருவரும் சேர்ந்து மொத்தம் 500 மரக்கன்றுகள் நட வேண்டும். இந்த மரக்கன்றுகள் அனைத்தும் தெற்கு தில்லியில் வனப் பகுதியில் நட வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அபராதமாக 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி சிலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நாஜ்மி வஜீரி அமர்வில் மார்ச் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் விஜய் அகர்வால் ஆஜராகி, 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு பிறப்பித்த உத்தரவை ஏற்கத் தயாராக இருப்பதாகவும், இருப்பினும் மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான செலவு அதிகமாவதால் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதற்கு நீதிபதி நாஜ்மி வஜீரி,  உத்தரவில் தெரிவிக்கப்பட்டபடி மரக்கன்றுகளை நட்டு, மழைக்காலம் வரை பராமரித்தே ஆக வேண்டும். மும்பை போன்ற மாநகரங்களில் வசதியானர்கள் வசிக்கும் முகவரியைக் கொண்டவர்கள் இதற்கான செலவை ஏற்க முடியும். ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் 3 ஆயிரம் மரக்கன்றுகளுக்குப் பதிலாக தலா 1,500 மரக்கன்றுகள் வீதம் நட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்கள் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா தீங்க்ரா ஷேகல் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாதவரை, மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணையைத் தொடர முடியாது எனத் தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com