டி.டி.வி. தினகரன் அணிக்கு பொதுச் சின்னம் வழங்க உத்தரவு

தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக)  துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை
டி.டி.வி. தினகரன் அணிக்கு பொதுச் சின்னம் வழங்க உத்தரவு

தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக)  துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. எனினும், பொதுச் சின்னத்தில் ஏதாவது ஒன்றை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணிக்கு அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 
இதற்கிடையே, இந்த உத்தரவை வேறு எந்த வழக்கிலும் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்த விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, டி.டி.வி. தினகரன் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், வழக்குரைஞர் என். ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர். 
அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கான உத்தரவு நகல் எங்கே? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி கட்சியைப் பதிவு செய்யாதபோது சின்னத்தை எப்படி ஒதுக்க முடியும்? உங்கள் அமைப்பைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றார்.
 அப்போது, மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், இடைக்காலமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும். இதுபோன்ற உத்தரவை உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கட்சியைப் பதிவு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகினீர்களா? கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
 பின்னர், மற்றொரு மூத்த வழக்குரைஞரான அபிஷேக் மனு சிங்வி, எங்கள் தரப்பினர்தான் உண்மையான அதிமுக. தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவை. 
பிரஷர் குக்கர் சின்னம் வேண்டாம். ஏதாவது ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 அப்போது குறுக்கிட்ட ரஞ்சன் கோகோய், மார்ச் 15-ஆம் தேதியே அல்லது திங்கள்கிழமையோ (மார்ச் 25) தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்திருக்கலாமே என்றார். 
இதற்கு மூத்த வழக்குரைஞரான அபிஷேக் மனு சிங்வி, 59 தொகுதிகளிலும் எங்கள் கட்சியினர் தனித்தனி சின்னங்களில் போட்டியிடவே எதிர்த்தரப்பினர் விரும்புகின்றனர். 
எனவே, சில கட்டுப்பாடுகளுடன் பொதுச் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்யலாம் என்றார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில் அதன் முதுநிலை முதன்மைச் செயலர் வில்ஃபர்டு, வழக்குரைஞர் அமித் சர்மா ஆகியோர் ஆஜராகி, கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை குறித்தும், தேர்தல் ஆணைய விதிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். 
மேலும், இதுவரை தேர்தல் ஆணையத்தை டி.டி.வி. தரப்பு அணுகவில்லை. அணுகினால் பரிசீலிப்போம். 
இருப்பினும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் சில சிக்கல்கள் உள்ளன என்றனர்.
 அப்போது, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, கே.வி. விஸ்வநாதன், குரு கிருஷ்ண குமார் ஆகியோர் வாதிடுகையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு மட்டுமே சின்னத்தை ஒதுக்க முடியும் என்றனர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 
பிரஷர் குக்கர் சின்னத்தை பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ள முடியாது. 
இருப்பினும் தமிழகம், புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மனுதாரர் டி.டி.வி. தினகரன் தெரிவிக்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். 
மனுதாரர் தெரிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்கள் சுயேச்சைகளாக மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் வேட்பாளர்களாக கணக்கில் கொள்ள முடியாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த உத்தரவை வேறு எந்த வழக்கிலும் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கொள்காட்டி, விரைவில் பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் சார்பில் வழக்குரைஞர் என். ராஜா செந்தூர் பாண்டியன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலையில் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com