தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள்: வீரப்ப மொய்லி

மக்களவைத் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டாலும், தேர்தலுக்கு பின்பு நிச்சயம் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள்: வீரப்ப மொய்லி


மக்களவைத் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டாலும், தேர்தலுக்கு பின்பு நிச்சயம் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், காங்கிரஸ் கூட்டணியை பிரதான கட்சிகள் தவிர்த்து விட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வீரப்ப மொய்லி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கவில்லை என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. எங்கள் அனைவரது கொள்கையும், விருப்பமும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்கடிப்பதுதான். அதனால் தேர்தலுக்கு பின்னர் நிச்சயம் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பார்கள்.
கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், இடதுசாரி முன்னணிக்கும்தான் போட்டி. இதில் இந்த இரு கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு எதிராகத்தான் போட்டியிடுகின்றன. பாஜகவை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுடன் நாங்கள் போட்டியிடும் சூழல் நிலவி உள்ளது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. இடதுசாரி முன்னணியுடன்  நாங்கள் கூட்டணி வைக்க இயலாது. 
எங்கள் அனைவருக்கும் பொதுவான எதிரி பாஜகதான். அவர்களுக்கு எதிராக நிச்சயம் நாங்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறினார்.
தேர்தலுக்கு பின்பு இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, பாஜகவுக்கு எதிராக போராடும்போது, தேவைப்பட்டால் அதுவும் நடக்கும் என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாய் அளிப்பதாக ராகுல் காந்தி அளித்த வாக்குறுதி, தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்குமா என்ற கேள்விக்கு, நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். வறுமையில் உள்ள  மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவி புரியும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டும் அல்ல என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com