மக்களவைத் தேர்தலில் போட்டியா? நடிகர் சஞ்சய் தத் மறுப்பு

மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல்களை பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மறுத்துள்ளார். அதே நேரத்தில்,
மக்களவைத் தேர்தலில் போட்டியா? நடிகர் சஞ்சய் தத் மறுப்பு


மக்களவைத் தேர்தலில், தான் போட்டியிட இருப்பதாக வெளியான தகவல்களை பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மறுத்துள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ் சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி பிரியா தத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத்தின் தந்தையான சுனில் தத், காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடமேற்கு தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு மாரடைப்பால் அவர் மரணமடைந்தார். அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு, மும்பை வடமேற்கு தொகுதியில் அவரது மகள் பிரியா தத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அவர், பாஜக வேட்பாளர் பூனம் மகாஜனிடம் தோல்வியடைந்தார். இப்போது மீண்டும் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார்.
இந்நிலையில், சஞ்சய் தத்தும் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியானது. இதற்கு மறுப்புத் தெரிவித்து அவர் செவ்வாய்க்கிழமை சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக வெளியான செய்திகள் தவறானவை. அதே நேரத்தில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் எனது சகோதரி பிரியா தத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதுவே நாம் நமது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆற்றும் சிறந்த கடமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு, துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்து உதவி புரிந்ததாக சஞ்சய் தத்துக்கு எதிராகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சிறையில் நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே மகாராஷ்டிர அரசு கடந்த ஆண்டு அவரை விடுவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com