மேனகா, வருண் காந்திக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு: முரளி மனோகர் ஜோஷிக்கு இடமில்லை

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 29 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக எம்.பி.  வருண் காந்தி ஆகியோருக்கு
மேனகா, வருண் காந்திக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு: முரளி மனோகர் ஜோஷிக்கு இடமில்லை


உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 29 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பாஜக எம்.பி.  வருண் காந்தி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் போட்டியிடவுள்ள 29 பேர் அடங்கியுள்ள வேட்பாளர் பட்டியலை பாஜக தேசிய பொது செயலாளர் அருண் சிங் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
காஜிப்பூர் தொகுதியில்  மனோஜ் சின்ஹா மீண்டும் போட்டி: மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காஜிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 
சுல்தான்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். மேனகா காந்தியின் மகனும், எம்.பி.யுமான வருண் காந்திக்கு பிலிபிட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு, சந்தெளலி தொகுதியில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்த ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான ரீட்டா பகுகுணா ஜோஷி, அலாகாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜோஷிக்கு வாய்ப்பு மறுப்பு: இதனிடையே, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இந்த தேர்தலில் வாய்ப்பளிக்கப்படவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கான்பூர் தொகுதியில் போட்டியிட்டு  முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார்.  இந்நிலையில், இந்த தேர்தலில் கான்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சர் சத்யதேவ் பச்செளரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, பி.சி. கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலையும் பாஜக வெளியிட்டது.
பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்ரதா: பிரபல நடிகையும், முன்னாள் மக்களவை எம்.பி. யுமான ஜெயப்ரதா(56), செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் உள்ளிட்ட தலைவர்களின் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 
இதுகுறித்து ஜெயப்ரதா கூறுகையில்,  பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. இத்தகைய தைரியம் மிகுந்த தலைவரின் கீழ் பணியாற்றுவதற்கு நான் பெருமைப்படுகிறேன். பாஜகவில் என்னை இணைத்து கொண்டதற்காக, கட்சிக்கும், தலைவர் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை நடித்துள்ள ஜெயப்ரதா, 1990-களில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தொண்டாற்றினார். அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாகவும் அவர் பதவி வகித்துள்ளார். அதையடுத்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி, சமாஜவாதி கட்சியில் இணைந்தார். கடந்த 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சியின் சார்பாக ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு முறை சமாஜவாதி கட்சி மக்களவை எம்.பி.யாக இருந்த அவர், அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதிலிருந்து விலகி ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியில் இணைந்தார். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய லோக் தளம் சார்பில் பிஜ்னோர் பகுதியில் அவர் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com