வறுமை மீது துல்லியத் தாக்குதல் நடத்துவோம்:  ராகுல் காந்தி வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிப்பதற்கான துல்லியத் தாக்குதல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
வறுமை மீது துல்லியத் தாக்குதல் நடத்துவோம்:  ராகுல் காந்தி வாக்குறுதி


காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிப்பதற்கான துல்லியத் தாக்குதல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள 20 கோடி குடும்பங்களுக்கு, குறைந்தபட்ச வருவாய் ஆதாரமாக ஆண்டுக்கு தலா ரூ.72,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை அறிவித்திருந்தது. 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், சூரத்கார் நகரில் அக்கட்சியின் பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:
நாட்டில் வறுமையை நாங்கள் ஒழிப்போம். இதில் வெற்றி நிச்சயம். வரலாற்றில் எந்தவொரு நாடும் இதைச் செய்ததில்லை. 21-ஆம் நூற்றாண்டில் நாட்டில் ஒரேயொரு ஏழை கூட இருக்கப் போவதில்லை. 
ஏழைகளை ஒழிக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால், நாங்கள் வறுமையை ஒழிக்கவுள்ளோம்.
இதை எப்படிச் செய்யப் போகிறோம் என்ற கேள்வி எங்களுக்கு எழுந்தது. ஆனால், அது தொடர்பாக விவாதித்து, திட்டமிட்ட பிறகு, மாதந்தோறும் ரூ.12,000 குறைந்தபட்ச வருவாயாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். வெகுவிரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, நாட்டில் குறைந்தபட்ச மாத வருவாய் ரூ.12,000/-ஆக இருக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், வறுமையில் இருந்து மீட்கப்பட்டவர்கள், கடந்த 5 ஆண்டுகளில் மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
முந்தைய ஆட்சியில் மொத்தம் 14 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டனர்.
ஆனால், நாட்டில் இன்னும் 25 கோடி மக்கள் ஏழைகளாக வாழ்வது வெட்கக்கேடானது. தொழிலாளிகள் தங்கள் உழைப்புக்கும், பொருளுக்கும் மிகச் சரியான ஊதியத்தை பெறுவதில்லை. 
10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் மோடி முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். 
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பலன் என்ன என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். 
அவரது ஆட்சியின் கீழ் வறுமையும், வேலையின்மையும் அதிகரித்துவிட்டது.
கடந்த தேர்தலுக்கு முன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், அனைவரின் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றும் மோடி வாக்குறுதி கொடுத்தார். 
மாபெரும் வாக்குறுதிகளை அவர் கொடுத்தார். மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதையெல்லாம் பேசினார்.
என்னை பிரதமராக்க வேண்டாம்; நாட்டின் காவலாளி ஆக்குங்கள் என்று மக்களிடம் மோடி கேட்டுக் கொண்டார். 
ஆனால், நான் உங்களுக்கான காவலாளி அல்ல; அனில் அம்பானிக்குத்தான் காவலாளி என்பதை அவர் ஒருபோதும் உங்களிடம் கூறியதில்லை என்றார் ராகுல் காந்தி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com