Enable Javscript for better performance
அத்வானி, ஜோஷி சகாப்தம் முடிந்துவிடவில்லை: உ.பி. பாஜக அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    அத்வானி, ஜோஷி சகாப்தம் முடிந்துவிடவில்லை: உ.பி. பாஜக அமைச்சர்

    By DIN  |   Published on : 28th March 2019 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    adwani1


    மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால், அவர்களது சகாப்தம் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அவர்கள் தொடர்ந்து கட்சிக்கு வழிகாட்டி வருகின்றனர் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சூரிய பிரதாப் ஷாகி தெரிவித்துள்ளார்.
    வயது முதிர்ந்த தலைவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்று பாஜக முடிவெடுத்ததை அடுத்து, மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பி.சி.கந்தூரி உள்ளிட்டோருக்கு வரும் மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர்கள் இப்போது எம்.பி.யாக உள்ள தொகுதிகளுக்கு வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். முக்கியமாக அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.
    தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சித் தலைமை தன்னிடம் வலியுறுத்தியுள்ளது என்று கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு முரளி மனோகர் ஜோஷி கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
    இந்நிலையில் பாலியாவில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் சூரிய பிரதாப் ஷாகி இது தொடர்பாக கூறுகையில், சில சூழ்நிலைகள், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி உள்ளிட்டோருக்கு தேர்தலில் கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதற்காக பாஜகவில் அவர்களது சகாப்தம் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அவர்கள் இப்போதும் எங்களது மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள்தான். எங்கள் கட்சிக்கு வழிகாட்டும் தலைவர்களாகவே திகழ்கின்றனர் என்றார்.
    காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, உத்தரப் பிரதேசத்தில் காசி, அயோத்தி என எங்கு வேண்டுமானாலும் அவர் பயணிக்கலாம். ராமர் மீது அவர் பக்தி கொண்டுள்ளது நல்லதுதான். முன்பு அங்கு ராமர் இருந்தார் என்பதை காங்கிரஸ் மறுத்துள்ளது. அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாகவே உள்ளது. ஆனால், காங்கிரஸ்தான் தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai