Enable Javscript for better performance
ஆண்டுக்கு ரூ.72,000: சாத்தியமான திட்டம்தான்: ப.சிதம்பரம்- Dinamani

சுடச்சுட

    
    pc1

    ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தரும் ஏழைகளுக்கு நீதி வறுமை ஒழிப்புத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்கக் கூடிய சாத்தியமான திட்டமே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
    சென்னை சத்தியமூர்த்தி பவனில் ப.சிதம்பரம் புதன்கிழமை அளித்த பேட்டி:
    ஏழைகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் என்ற புரட்சிகரமான திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  கடைமனிதனின் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைப்பதுதான் நமது நோக்கம் என்று காந்தி கூறினார். அதை நனவாக்கும் திட்டம் இது. 
    இந்தியாவில் இன்னும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களைக் கணக்கில் கொண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். 5 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறும். 
    ஒரு குடும்பத்தில் 5 பேர் என்று எடுத்துக் கொண்டால் 25 கோடி மக்கள் பயன் பெறுவர். எல்லாக் குறியீடுகளையும் கணக்கில் எடுத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவது என்று முடிவு செய்துள்ளோம். அதாவது மாதம் ரூ. 6 ஆயிரம் தர உள்ளோம்.
    நிபுணர்கள் குழு அமைக்கப்படும்: இந்தத் திட்டத்தை வடிப்பதற்கு அறிஞர்கள், நிபுணர்கள் குழு அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு சோதனைக் காலம் என்று உள்ளது. 
    அதற்குப் பிறகு படிப்படியாக 5 கோடி குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மறுநாளே இந்தத் திட்டம் வரும் என்று சொல்ல மாட்டோம். 
    1991 -இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தியது. பிறகு, 2004- 2014-ஆகிய 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 
    இந்த வளர்ச்சிதான் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி ரூ.200 லட்சம் கோடி. 
    ஆண்டுக்கு ஏறத்தாழ 12 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளோம். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் வருமானங்கள், செலவினங்களை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், இன்றைய வருமானம் என்பது 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். அதனால், வறுமை ஒழிப்புத் திட்டத்தை  5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்க  முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
    செயல்படுத்த முடியும்: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தபோது அதைச் செயல்படுத்த முடியாது என்று கூறினர். அதைச் செயல்படுத்திக் காட்டினோம். 
    அதைப்போல ஏழைகளுக்கு நீதி என்ற திட்டத்தையும் செயல்படுத்துவோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் சமூக நலத் திட்டங்களுக்கு வழங்கப்படும் எந்த மானியங்களும் பாதிக்கப்படாது.
    தேர்தலுக்காக இந்தத் திட்டத்தை அறிவிக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள். எந்த அரசியல் கட்சியும் தேர்தல் தோல்விக்காக ஒரு திட்டத்தை அறிவிப்பது இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் வருகிறது. தேர்தல் அறிக்கையும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வெளியிடுகிறோம். அந்த அடிப்படையில் தான் வெளியிடுகிறோம்.
    இந்தத் திட்டம் சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளாராம். நூறு நாள் வேலைத் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தபோது, அது சாத்தியமில்லை என்று கூறியவர் அருண் ஜேட்லி. 
    ஊதியச் சந்தையைப் பாதிக்கும் அபாயகரமான திட்டம் என்று பாஜக இதை விமர்சிக்கிறது. ஏழ்மை ஒழிய வேண்டும் என்றால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்ச வருமானம் வேண்டும். அதை அளிக்க நினைப்பது உயர்ந்த நோக்கம். இதைக் கேலி செய்பவர்கள் வறுமை ஒழியக் கூடாது என்று நினைப்பவர்கள். 
    21-ஆம் நூற்றாண்டில் வறுமை ஒழிப்பதை ஓர் அறமாக இந்திய மக்கள் ஏற்றுக் கொள்வர்.
    காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அச்சில் இருக்கிறது. ஏப்ரல் 2-ஆம் தேதி வெளிவரலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் 5 கோடி பேர் இருப்பதற்கு எல்லா அரசுகளும் காரணம். எல்லா அரசுகளுக்கும் வாக்களித்த மக்களும் காரணம். 
    இந்தியாவில் 90 சதவீதம் வறுமை இருந்தது. அதை 70 சதவீதம் குறைத்துள்ளோம். மீதமுள்ள 20 சதவீதத்தைக் குறைப்பதற்கு ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளோம் என்றார் ப.சிதம்பரம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai