Enable Javscript for better performance
ஏப்.1-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45- Dinamani

சுடச்சுட

    
    pslv-c45

    இறுதிக்கட்ட வடிவமைப்பு பணியில் பிஎஸ்எல்வி -சி45


    பிஎஸ்எல்விசி- 45 ராக்கெட், 29 செயற்கைக்கோள்களுடன் வரும் திங்கள்கிழமை (ஏப்.1) காலை 9.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. 
    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. அதற்கான கவுன்ட் டவுன் விரைவில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தகவல்கள் தெரிவிக்கின்றன.
    நிகழாண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 2-ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை, இந்தியாவின் எமிசாட் செயற்கைக்கோள் மற்றும் 4 வெளிநாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான, அனைத்து ஆயத்தப் பணிகளும், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும்,  லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  
    எதற்காக உருவாக்கப்பட்டது?: இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதன் மொத்த எடை 436 கிலோ என்றும், அதன் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளைக்  கண்காணிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களில் 753 கிலோ மீட்டர் தொலைவில் எமிசாட் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதன் பின்னர், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை 505 - 503 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.              


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai