Enable Javscript for better performance
காங்கிரஸில் நடிகை ஊர்மிளா- Dinamani

சுடச்சுட

    
    ragul3

    தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகை ஊர்மிளா.


    பிரபல ஹிந்தி நடிகை ஊர்மிளா மடோண்கர், புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
    தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு புதன்கிழமை சென்று அவரைச் சந்தித்தார். அதையடுத்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்தார். ஊர்மிளா கட்சியில் இணைந்ததற்கு  ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.
    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஊர்மிளா கூறியதாவது:
    தேர்தலுக்காகவோ, பதவிக்காகவோ நான் கட்சியில் இணையவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காக போராடியுள்ளது. சிறு வயதில் இருந்தே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.  இன்று நான் காங்கிரஸில் இணைந்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்று கூறினார்.
    வரும் மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை(வடக்கு) மக்களவைத் தொகுதியில் ஊர்மிளா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஊர்மிளா கட்சியில் இணைந்தது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,  கடின உழைப்பு மற்றும் திறமையால் சாதித்து முன்னேறியவர் ஊர்மிளா. பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கும், கட்சியை வலுப்படுத்தவும் அவர் திறம்பட பணியாற்றுவார் என்றார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai