Enable Javscript for better performance
கோவா: நள்ளிரவில் அரங்கேறிய அரசியல் மாற்றம்: பிளவுபட்ட கூட்டணிக் கட்சி; பாஜகவில் இணைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவா: நள்ளிரவில் அரங்கேறிய அரசியல் மாற்றம்: பிளவுபட்ட கூட்டணிக் கட்சி; பாஜகவில் இணைப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கோவா மாநிலத்தில் பாஜகவை ஆதரித்து வந்த கூட்டணிக் கட்சியான எம்ஜிபி இரண்டாக உடைந்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ-க்கள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். 
    அவர்கள் இருவரும், புதன்கிழமை நள்ளிரவு 1.45 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் மைக்கேல் லோபோவைச் சந்தித்து, எம்ஜிபி சட்டப்பேரவைக் கட்சியை பாஜகவுடன் இணைப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினர்.
    எம்ஜிபி கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ-வும், துணை முதல்வருமான சுதின் தவாலிகர், தன்னை பாஜவில் இணைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு ஆளுநர் மிருதுளா சின்ஹாவிற்கு, முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
    கோவா மாநில சட்டப்பேரவையின் மொத்த பலம் 40 ஆகும். அதில் 4 இடங்கள் காலியாக உள்ளன. அது தவிர்த்து, 36 உறுப்பினர்களைக் கொண்ட  சட்டப்பேரவையில், பாஜகவின் பலம் 14-ஆக அதிகரித்துள்ளது.
    அதே சமயம், இந்த இணைப்பு குறித்து மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜிஎஃப்பி கவலை தெரிவித்துள்ளது. கூட்டணி அரசின் எதிர்கால திட்டம் என்னவென்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்று ஜிஎஃப்பி கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான விஜய் சர்தேசாய் வலியுறுத்தியுள்ளார்.
    புதிய அரசுக்கு நெருக்கடி: கோவாவில் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ஆம் தேதி காலமானார். அதைத்தொடர்ந்து பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அரசு அமைந்தது. 
    பின்னர் கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய அரசு வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகள், சுயேச்சைகள் உள்பட 20 எம்எல்ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
    இருப்பினும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து சில நாள்களுக்குள்ளாக ஆளும் பாஜக அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. அதாவது, பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறவுள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசிக்க கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது என்றும் எம்ஜிபி கட்சித் தலைவர் தீபக் தவாலிகர் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
    அதிரடி திருப்பம்: கோவா துணை முதல்வர் உள்பட எம்ஜிபி கட்சிக்கு மூன்று எம்எல்ஏ-க்கள் இருந்தனர். அவர்களில் மனோகர் ஆஜ்கான்கர் மற்றும் தீபக் பவாஸ்கர் ஆகிய இருவரும், எம்ஜிபி கட்சியில் இருந்து விலகுவது என்று செவ்வாய்க்கிழமை மாலை கூட்டாக முடிவு செய்தனர்.
    அதன் பின்னர், முதல்வர் பிரமோத் சாவந்தை சந்தித்து இதுதொடர்பாகக் கூறியதாகவும், அவர் அறிவுறுத்தியதன் பேரில், ஆளுநர் மைக்கேல் லோபாவைச் சந்தித்து, எம்ஜிபி சட்டப்பேரவைக் கட்சியை பாஜகவில் இணைப்பதற்கான கடிதத்தை வழங்கியதாகவும் தீபக் பவாஸ்கர் தெரிவித்தார். 
    மனோகர் ஆஜ்கான்கர் ஏற்கெனவே அமைச்சரவையில் இருக்கிறார். அதே சமயம், தீபக் பவாஸ்கருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் எனத் தெரிகிறது.
    கட்சித் தாவல் பொருந்தாது: பொதுவாக, ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு தாவும்போது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவியை இழக்க நேரிடும். 
    ஆனால், ஒரு கட்சியின் மொத்த பலத்தில் 3-இல் இரண்டு பங்கு மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறினால் அந்த விதி பொருந்தாது.
    அந்த வகையில், எம்ஜிபி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்துள்ள இருவரும் பதவி பறிப்பில் இருந்து தப்பியுள்ளனர்.

    எம்ஜிபி - காங்கிரஸ் விமர்சனம்
    எம்ஜிபி கட்சியில் ஏற்பட்ட பிளவு தொடர்பாக பாஜக மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எம்ஜிபி கட்சியில் இருந்து விலகாத எம்எல்ஏ-வும், துணை முதல்வர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவருமான சுதின் தவாலிகர் இதுகுறித்து கூறுகையில், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தக் காவலர்கள் (பாஜக) எம்ஜிபி கட்சியில் இருந்து நள்ளிரவில் வழிப்பறி செய்துள்ளனர். மக்கள் இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மக்களே தீர்மானிப்பார்கள் என்றார்.
    பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தங்கள் சொந்தக் கட்சிக்கே ஆபத்து வரும் என்ற அறிகுறியை, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நாடெங்கிலும் பாஜகவுடன் அணி சேர்ந்துள்ள கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோவா காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுனில் காவந்த்கர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai