Enable Javscript for better performance
செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    செயற்கைக்கோளை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி அறிவிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi2

    விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்றும், செயல்பாட்டில் இருந்த செயற்கைக்கோள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை அறிவித்தார்.
    இந்த வெற்றியின் மூலமாக, செயற்கைக்கோளை அழிக்கும் வல்லமை படைத்த அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நான்காவதாக இந்தியாவும் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
    சுட்டு வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோள் யாருக்குச் சொந்தமானது என்பதை பிரதமர் குறிப்பிடவில்லை. எனினும், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே மிஷன் சக்தி சோதனை நடத்தப்பட்டது என்றும், வேறு எந்த நாட்டுக்கு எதிராகவும் இந்த திறன் பயன்படுத்தப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதியளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
    நாட்டு மக்களுக்கு உரை: பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலையில் ஆலோசனை நடத்தினார். 
    அதைத்தொடர்ந்து, சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவிருப்பதாகவும், தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் வாயிலாக அதைக் கேட்டறியலாம் என்றும் சுட்டுரையில் பிரதமர் பதிவிட்டார். 
    பின்னர், அவர் உரையாற்றியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (டிஆர்டிஓ) சார்பில் நிகழ்த்தப்பட்டுள்ள புதிய சாதனை குறித்து விவரித்தார். அப்போது, மோடி கூறியதாவது:
    ஒவ்வொரு தேசத்தின் பயணத்திலும் சில தருணங்கள் மிகுந்த பெருமையை தரக் கூடியதாகவும், அடுத்து வரக்கூடிய தலைமுறையினரிடம் வரலாற்று தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமையும். அப்படியொரு தருணம் தற்போது இந்தியாவுக்கு அமைந்துள்ளது.
    விண்வெளி பாதுகாப்பில் இந்தியா தனது பெயரை பொறித்திருக்கிறது. புவியின் உள்வட்டச் சுற்றுப்பாதையில் 300 கி.மீ. தொலைவுக்கு அப்பால் செயல்பாட்டில் இருந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதுபோன்று, உள்வட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது எந்தவொரு நாட்டுக்கும் அரிதான சாதனையாகவே அமையும்.
    விண்வெளியில் புதிய சக்தியாக இந்தியா உயர்ந்து நிற்கிறது. இந்தியாவை இது பலப்படுத்துவதுடன், இன்னும் கூடுதலான பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்துக்கு புதிய பலத்தை அளிப்பதாக செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை அமையும்.
    அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இத்தகைய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

    ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து செயற்கைக்கோளை அழிக்க விண்வெளிக்கு ஏவப்பட்ட ஏவுகணை.


    3 நிமிடங்களில் வெற்றி: மிஷன் சக்தி திட்டம் மிகவும் கடினமானது. மிகத் துல்லியமாக கணிக்கப்பட்ட இலக்குடன், மிக அதிவேகத்தில் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏவுகணை செலுத்தப்பட்ட மூன்றே நிமிடங்களில் இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. 
    நமது விண்வெளி திட்டத்துக்கான வெற்றி மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் அளப்பரிய திறனை எடுத்துக்கூறுவதாக இது அமைந்துள்ளது.
    பிற நாடுகளுக்கு எதிரானதல்ல: நம்மிடம் போதுமான செயற்கைக்கோள்கள் உள்ளன. வேளாண்துறை, பேரிடர் மேலாண்மை, தொலைத்தொடர்பு, வானிலை, வழிகாட்டி உள்பட பல துறைகளுக்கான பங்களிப்பை அந்த செயற்கைக்கோள்கள் வழங்குகின்றன. 
    விண்வெளியில் ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போதைய வெற்றி காரணமாக, அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது.
    இந்தியாவின் திறன் வேறெந்த நாடுகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது என்று சர்வதேச சமூகத்திற்கு உறுதியளிக்கிறேன். இத்திட்டம் முற்றிலும் இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கானது. எந்தவொரு சர்வதேச விதியையும், ஒப்பந்தங்களையும் மீறுவதாக அந்த சோதனை அமையவில்லை என்றார் மோடி.

    தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
    நாட்டின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் சார்ந்த விஷயங்களில் அறிவிப்பு வெளியிடுவது தேர்தல் நன்னடத்தை விதிகளின் கீழ் வராது என்றும், அதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. அதே சமயம், இந்த விஷயம் தொடர்பாக ஆலோசனை செய்ய குழு அமைப்பது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், பிரதமரின் உரையை அரசிடம் கேட்டுப் பெற்று ஆய்வுக்கு உள்படுத்துவது குறித்து பரிசீலிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உள்நாட்டுத் தயாரிப்பு: டிஆர்டிஓ பெருமிதம்
    செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்திருப்பது இந்தியாவுக்கான மாபெரும் சாதனையாகும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவத்தின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
    இதுதொடர்பாக சதீஷ் ரெட்டி புதன்கிழமை கூறியதாவது:
    செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்திருப்பது நமது திறனை வெளிக்காட்டியுள்ளது. மிகச் சிறந்த தற்காப்புக் கருவியாக அது செயல்படும். 
    இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. முடிந்த வரையில் அந்தத் திட்டம் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டது. இதுபோன்ற திட்டங்களை டிஆர்டிஓ செயல்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார் அவர்.

    பாராட்டும் - விமர்சனமும்


    இந்தியர்களுக்கு இது பெருமைமிகு தருணமாகும். மிஷன் சக்தி திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டுகிறேன்.  உறுதியான தலைமையின் கீழ் பலமான தேசத்தை பெற்று வருகிறோம்.
    -அமித் ஷா
    பாஜக தலைவர்

    டிஆர்டிஓ-வுக்கு பாராட்டுக்கள். உங்கள் பணி மிகவும் பெருமைக்குரியதாக இருக்கிறது. அதே சமயம், உலக நாடக தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
    -ராகுல் காந்தி
    காங்கிரஸ் தலைவர்

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுக்க நடைபோடுவது மட்டுமல்லாமல், அறிவியல் துறையிலும் வல்லமை கொண்ட நாடாக மாறி 
    வருகிறது.
    -நிதின் கட்கரி
    மத்திய அமைச்சர்

    நாடகம் எல்லை மீறிச் செல்கிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறலாகும். அரசியல் ரீதியிலான பலன்களுக்காகவே இத்தகைய அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
    -மம்தா பானர்ஜி
    மேற்கு வங்க முதல்வர்

    டிஆர்டிஓ மற்றும் அதன் விஞ்ஞானிகளின் சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொண்டுள்ள இந்த வேளையில் எனது வாழ்த்துகள்.
    -நிதீஷ் குமார்
    பிகார் முதல்வர்

    விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியிருக்கும் விஞ்ஞானிகளின் வெற்றிகரமான சோதனைக்கு வாழ்த்துகள். ஆனால், தேர்தல் லாபங்களை கணக்கில் கொண்டு இந்த விஷயத்தில் பிரதமர் அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.
    -மாயாவதி
    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai