Enable Javscript for better performance
திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ரூ.97.31 லட்சத்துக்கு ஏலம்- Dinamani

சுடச்சுட

    


    மைசூரை ஆண்ட அரசர் திப்பு சுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பிரிட்டனில் ரூ.97.31 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. 
    இதில், திப்பு சுல்தான் தனது தற்காப்புக்கு பயன்படுத்திய கத்தியுடன் கூடிய துப்பாக்கி மட்டும் ரூ.54.56 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 
    அவர் பயன்படுத்திய இதர துப்பாக்கிகளைப் போல் அல்லாமல், அதிக சேதமடைந்த நிலையில் காணப்படும் இந்தத் துப்பாக்கி திப்பு சுல்தான் கடைசியாகப் போரிட்ட செரிங்கபட்டணம் போர்க் களத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக ஏலக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    அதேபோல், திப்பு சுல்தானுடையதாக நம்பப்படும் உடை வாளும், அது இணைக்கப்படும் பட்டையும் ரூ.16.82 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. அவர் காலத்து சிறிய ரக பெட்டி ஒன்று ரூ.15.91 லட்சத்துக்கும், அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரை பதித்த தங்க மோதிரம் ஒன்று ரூ.2.54 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
    ஏலத்தில் விடப்பட்ட இந்தப் பொருள்கள் யாவும், கடந்த 1799-ஆம் ஆண்டு செரிங்கபட்டனத்தில் நடைபெற்ற போரில் திப்பு சுல்தான் தோல்வி கண்டு இறந்த பிறகு, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ராணுவ அதிகாரி தாமஸ் ஹார்ட் என்பவரால் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டவையாகும்.
    பல தலைமுறைகளைக் கடந்து வந்த அந்த கலைப் பொருள்களுக்கு ஒரு பிரிட்டன் தம்பதி உரிமையாளர்களாக இருந்தனர். இந்நிலையில் அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்க முடிவு செய்தனர். 
    இந்தியாவிலிருந்து திருடப்பட்ட கலைப் பொருள்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காகச் செயல்பட்டு வரும் இந்தியா பிரைட் புராஜெக்ட் என்ற அமைப்பு அந்தத் தம்பதியை அணுகி, அந்த கலைப் பொருள்களை ஏலத்தில் விடாமல் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது.
    மேலும், அந்தக் கலைப் பொருள்கள் ஏலத்துக்கு வருவது தொடர்பாக  பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தகவல் அளித்தது. 
    எனினும், அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்ட அந்தத் தம்பதி, ஏலத் தொகையில் ஒரு பெரும் பகுதியை இந்தியாவில் உள்ள பள்ளி ஒன்றுக்கு நன்கொடையாக அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 
    இந்த ஏலத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர் என்று ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai