Enable Javscript for better performance
தோல்வி பயத்தில் மோடி: ராகுல் காந்தி தாக்கு- Dinamani

சுடச்சுட

    
    ragul1


    வரும் மக்களவைத் தேர்தலில் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற பயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    முன்னதாக, விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது குறித்து தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை தெரிவித்தார்.
    அதைக் குறிப்பிட்டு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு மாநாட்டில்  ராகுல் பேசியதாவது:
    ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு நாட்டு மக்களை சுமார் 45 நிமிடம் மோடி காக்க வைத்தார். நாட்டு மக்களுடன் உரையாடுகையில் அவரது முகத்தில் தோல்வி பயம் தெரிந்தது. ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சியால்தான் நீதி வழங்க முடியும் என்பதை மோடி புரிந்து கொண்டுள்ளார். வரும் தேர்தலில் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று அவருக்கு தெரிந்து விட்டது.
    நாட்டில் உள்ள மக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று மோடி கடந்த தேர்தலின்போது பொய் பிரசாரம் செய்தார். ஆனால், அவ்வாறு செய்ய இயலாததை வாக்குறுதியாக காங்கிரஸ் அளிக்காது. ஏழை மக்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 72, 000 செலுத்துவதாக வாக்குறுதி அளிக்கிறோம். வறுமையில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த குறைந்தபட்ச வருமானத் திட்டத்தை காங்கிரஸ் செயல்படுத்தும்.
    இனி வரும் காலங்களில் காங்கிரஸில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நிச்சயம் வாய்ப்புகள் வழங்கப்படும். இப்போது, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முதல்வர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதுபோல, எம்எல்ஏ, எம்.பி. பதவிகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்படும். நான் மோடி மாதிரி பொய்யுரைப்பவர் அல்ல. காங்கிரஸில், இதர பிற்படுத்தப்பட்டோர், தலித், விவசாயிகள், ஏழைகள் என அனைவருக்கும் சமமாக வாய்ப்புகள் வழங்கப்படும். 
    புதிதாக தொழில் தொடங்குவதற்காக, லட்சக்கணக்கான இளைஞர்கள் வங்கிக் கடனுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதில்லை. இதை காங்கிரஸால் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவருக்கும் நீதி கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும். தொழில் தொடங்குவதற்கு இளைஞர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai