Enable Javscript for better performance
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கை: ராம்நாத் கோவிந்த் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கை: ராம்நாத் கோவிந்த் உறுதி

    By DIN  |   Published on : 28th March 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramnath

    குரோஷியாவில் உள்ள இந்திய மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


    நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும் என்று குரோஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
    அரசுமுறைப் பயணமாக மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராம்நாத் கோவிந்த், முதல்கட்டமாக ஐரோப்பாவில் உள்ள குரோஷியாவுக்குத் திங்கள்கிழமை சென்றடைந்தார். அந்நாட்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது, இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், அந்நாட்டுத் தலைநகர் ஜாக்ரெபில் இந்திய மக்களிடையே செவ்வாய்க்கிழமை உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:
    அமைதியும், பாதுகாப்புமே மனிதஇனத்தின் நலமான வாழ்வுக்கு மிக முக்கியமாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக குரோஷிய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை ஆதரிப்போர் மீதும், பயங்கரவாதத்துக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்குவோர் மீதும் உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்.
    உலகப் பொருளாதார வளர்ச்சியில், இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. எனவே, நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்வோர், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள், நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளன.
    ஒத்துழைப்பில் மேம்பாடு: பொருளாதாரம் உள்பட அனைத்துத் துறைகளிலும், இந்தியாவும், குரோஷியாவும் தங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள முனைப்பு காட்டுகின்றன. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும் பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இரு நாடுகளும் முயன்று வருகின்றன.
    இந்தியாவின் மொழி, கலாசாரம், தத்துவம், வரலாறு உள்ளிட்டவற்றுக்கு, குரோஷியாவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கடந்த 1926-ஆம் ஆண்டு குரோஷியாவுக்கு வருகை தந்தபோது, பல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்தார். ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவின் மொழிகள், தத்துவம், வரலாறு, கலாசாரம் உள்ளிட்டவற்றைக் கற்பதற்குத் தனித் துறையே இருப்பது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்கு, வேதங்கள் குறித்தும், புராணங்கள் தொடர்பாகவும் அடிக்கடி கூட்டங்கள் நடைபெற்று வருவது, ஆச்சரியத்தைத் தருகிறது.
    தனிச்சிறப்பு: மக்களாட்சியும், பன்முகத்தன்மையும், அமைதிவழியும் இந்தியாவுக்கான தனிச்சிறப்புகளாக விளங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவி வருகின்றன. உலகில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு, அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, அவற்றுக்கு உரிய முடிவெடுக்க இந்தியா தயாராக உள்ளது. உலக நாடுகள் அனைத்திடமும் நட்பு பாரட்ட இந்தியா ஆவலுடன் உள்ளது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai