Enable Javscript for better performance
பயணச்சீட்டுகளில் மோடி உருவப்படம்: ரயில்வே, விமானப் போக்குவரத்து அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்- Dinamani

சுடச்சுட

    

    பயணச்சீட்டுகளில் மோடி உருவப்படம்: ரயில்வே, விமானப் போக்குவரத்து அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    By DIN  |   Published on : 28th March 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ec


    தேர்தல் நடத்தை விதிகளை மீறி, ரயில் பயணச்சீட்டு மற்றும் ஏர்இந்தியா விமான அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் இருந்ததற்காக, ரயில்வே மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10-ஆம் தேதியில் இருந்து இந்த விதிமுறைகள் அமலில் உள்ளன.
    இந்நிலையில், ரயில் பயணச்சீட்டுகளிலும், ஏர் இந்தியா விமானத்தின் அனுமதிச் சீட்டிலும், பிரதமர் மோடியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் பயணச்சீட்டுகளில் மத்திய அரசின் சாதனைகளை விவரித்துள்ளதாகவும், பயணச்சீட்டின் ஒருபகுதி விளம்பரம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.
    அதையடுத்து, இந்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, பொதுச் சொத்தில் எவ்விதமான விளம்பரங்களும் செய்யக் கூடாது. அரசு செலவில், கட்சியின் சாதனைகளை வெளியிடுவது விதிமீறலாகும். அதனால் இதுகுறித்து பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.
    இதனிடையே, ரயில்வே அமைச்சகம் சார்பில் கூறுகையில்,  பயணச்சீட்டுகளில் உள்ள தலைவர்களின் உருவப்படத்தை நீக்குமாறு 17 ரயில்வே மண்டலங்களுக்கும் கடந்த வாரமே அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
    ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கையில்,  விமான அனுமதிச் சீட்டில் தலைவர்களின் உருவப்படம் ஏற்கெனவே அச்சிடப்பட்டது. இப்போது புதிதாக எதுவும் அச்சிடப்படவில்லை. அது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai