Enable Javscript for better performance
ராகுலின் திட்டம் ஏழைகளுக்கான அட்சயப் பாத்திரம்: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    ராகுலின் திட்டம் ஏழைகளுக்கான அட்சயப் பாத்திரம்: மு.க.ஸ்டாலின்

    By DIN  |   Published on : 28th March 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    STALINC


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருவாய்த் திட்டம் ஏழைகளுக்கான ஓர் அட்சயப் பாத்திரம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    ராகுல் காந்தியின்  குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் மூலம் 25 கோடி ஏழைகள் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பெறுவார்கள் என்ற அறிவிப்பு ஏழைகளுக்கு வரப்பிரசாதம் மட்டுமல்ல. அது ஓர் அட்சய பாத்திரமாக கண்ணுக்குத் தெரிகிறது. 
    சமூக நலத்திட்டங்கள் மூலம் ஏழைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே ஒரு நாட்டுக்குத் தேவையான முதுகெலும்பு என்று நிரூபித்துக் காட்டியவர் கருணாநிதி. அதுபோல்  ராகுல் காந்தியால் அறிவிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஏழைகளின் முகத்தில் 5 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் சிரிப்பைக் காண முடிகிறது.
    இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று பாஜகவினர் விதண்டாவாதம் செய்கின்றனர். இது ஒருபுறமிருக்க, நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் குமாரோ, பாஜக பிரசாரகராகவே மாறியதோடு மட்டுமல்லாமல், அத்திட்டம் செயல்படுத்த முடியாத ஒன்று என்று சொல்கிறார். இது எரிச்சலின் வெளிப்பாடே தவிர துளியும் உண்மை அல்ல. 
    விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வோம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்பு அறிவித்தபோதும் பாஜகவினர் இதே போன்று விஷமப் பிரசாரம் செய்தனர். 
    ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், திமுகவும் அங்கம் வகித்த நேரத்தில் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டமும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
    எனவே, ஏழைகளுக்கான இந்தக் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை திரட்டி, திமுக  - காங்கிரஸ் கூட்டணியால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 
    முதன்முறையாக இந்தியாவில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்துக்கு திமுகவின் இதயபூர்வமான ஆதரவினைத் தெரிவிக்கிறோம். 
    ஜூன் 3-ஆம் தேதிக்குப் பிறகு ஏழைகள் இந்த நாட்டின் எஜமானர்கள் என்ற நிலை திமுக - காங்கிரஸ் கூட்டணியால் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai