Enable Javscript for better performance
லோக்பால் உறுப்பினர்கள் 8 பேர் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    
    lokpal


    ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 8 பேர், புதன்கிழமை பதவியேற்றனர். லோக்பால் தலைவர் பினாகி சந்திர கோஷ், அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
    ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நோக்கில், லோக்பால் அமைப்பை மத்திய அரசு அண்மையில் அமைத்தது. அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்ட பினாகி சந்திர கோஷ்,   கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். இந்நிலையில், லோக்பால் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி, தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
    இதில், முன்னாள் நீதிபதிகள் திலீப் பி. போஸ்லே, பிரதீப் குமார் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய் குமார் திரிபாதி ஆகியோர் லோக்பால் அமைப்பின் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) எல்லையோர ஆயுதப் படையின் முதல் பெண் தலைவரான அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின், இந்திய வருவாய்ப் பணி முன்னாள் அதிகாரி (ஐஆர்எஸ்) மகேந்திர சிங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் பிரசாத் கெளதம் ஆகியோர் நீதித்துறை சாராத உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
    இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், லோக்பால் தலைவரும், அதன் உறுப்பினர்களும் முறைப்படி பதவியேற்றுள்ளதை அடுத்து, லோக்பால் அமைப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai