
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெள விமான நிலையத்தில் புதன்கிழமை கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா.
கட்சித் தலைமை விரும்பினால், தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அந்த மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா புதன்கிழமை தொடங்கினார்.
அமேதியில் நடைபெற்ற வாக்குச் சாவடி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:
காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டால், நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால், கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஏனெனில், கட்சியை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.
பாஜக மீது தாக்கு: பாஜக வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசிவருகிறது; அவர்கள் அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்ற உண்மையை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால், அதுகுறித்து மக்கள் தெரியாமல்தான் இருப்பார்கள். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் தோல்விகள் குறித்து நாம் எடுத்துரைத்தால்தான் மக்களுக்கு இந்த அரசின் உண்மை முகம் தெரிய வரும்.
நரேந்திர மோடி ஆட்சியில் உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை.
நாட்டு மக்கள் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி பொய் பிரசாரம் செய்தார். ஆனால் காங்கிரஸ் அவ்வாறில்லை. செய்யக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே காங்கிரஸ் அளிக்கும். ராஜஸ்தானில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தோம். அதன்படி, ஆட்சியமைத்த உடனேயே விவசாயக் கடனை தள்ளுபடி செய்தோம். அதுபோல, ஏழை மக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ. 72,000 குறைந்த பட்ச வருமானமாக நிச்சயம் வழங்கப்படும்.
சுற்றிப் பார்ப்பதற்காக மட்டும் தொகுதிக்கு வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...