
திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மம்தா பானர்ஜி.
மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சியமைத்தால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும்; திட்டக்குழுவை மீண்டும் அமைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மேலும் கூறியதாவது: 100 நாள்கள் வழங்கப்பட்டு வந்த வேலை உறுதியளிப்பு திட்டம் 200 நாள்களாக அதிகரிக்கப்படுவதுடன், அதன் ஊதியமும் இரட்டிப்பாக உயர்த்தப்படும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிதி ஆயோக் அமைப்பினால் எவ்வித பயனும் மக்களுக்கு ஏற்படவில்லை என்பதால், மீண்டும் திட்டக்குழு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்படும். மேலும், தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறையை பரிசீலனை செய்து, மக்களுக்கு உண்மையாக பயனளிக்கும் முறையில் வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அத்வானி, ஜோஷியை நடத்தும் விதம் வருத்தமளிக்கிறது: அவர் மேலும் கூறுகையில், பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களை அக்கட்சியினர் நடத்தும் விதம் உண்மையிலேயே வருத்தமளிப்பதாகும்.
இன்று (புதன்கிழமை) காலை அத்வானியிடம் நலம் விசாரித்தபோது, தான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார். பாஜகவை உருவாக்கிய மூத்த தலைவர்களை இதுபோன்று ஒதுக்கி வைப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக உள்ளது. இது, அவர்களது உள்கட்சி விவகாரம் என்பதால் இதற்கு மேல் பேச விரும்பவில்லை என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...