
காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தில்லி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வாக்குச் சாவடிகள் மற்றும் தபால் வாக்குப் பதிவு ஆகிய வசதிகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள், ஜம்மு மற்றும் தில்லியில் உள்ள முகாம்களில் அதிக அளவில் உள்ளனர். இவ்வாறு பிற பகுதிகளுக்கு புலம் பெயர்ந்திருக்கும் வாக்காளர்கள், தபால் வாக்குப்பதிவு மூலமாகவோ அல்லது சிறப்பு வாக்குச் சாவடி மூலமாகவோ அவர்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதியில் பதிவு செய்த வாக்காளர்கள், மற்றொரு தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாது. எனினும், கடந்த 1957-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள், மற்றொரு மக்களவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்.
அதன்படி, பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்கள், தில்லி, உதம்பூர், ஜம்மு ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள சிறப்பு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம். இந்த சிறப்பு வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இல்லாத வாக்காளர்கள், தபால் வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கலாம். இவ்வாறு தபால் மூலமாக வாக்களிக்க வேண்டியதற்கான விண்ணப்பத்தை தேர்தல் நடைபெறும் நாளுக்கு 10 நாள் முன்னதாக வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில், பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர்ஆகிய பகுதிகளின் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களாக, ஜம்மு மாவட்டத்தின் துணை ஆணையர், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்த காஷ்மீர் வாக்காளர்களுக்கான இத்தகைய சிறப்பு சலுகைகள், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல், 2004, 2009, 2014-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...