
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) முன்னாள் இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான லஞ்சப் புகார் குறித்த விசாரணையை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை என தில்லி உயர்நீதிமன்றத்திடம் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தில், ராகேஷ் அஸ்தானா மற்றும் பிறர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் பத்து வாரங்களுக்குள்விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி விதித்துள்ள கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ள ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கிரிமினல் சதித் திட்டம், ஊழல், கிரிமினல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணை ஒன்றில் ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் பாபு என்பவரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவரது வாக்குமூல ஆவணங்களில் மாற்றம் செய்ததாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் மற்றும் இடைத் தரகர் மனோஜ் பிரசாத் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ராகேஷ் அஸ்தானா, தேவேந்திர குமார், மனோஜ் பிரசாத் ஆகியோரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி நிராகரித்த தில்லி உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையும், விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான கோரிக்கையும் அடங்கிய சீலிடப்பட்ட உறையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
எனினும், கால நீட்டிப்புக்கான விண்ணப்பத்தின் நகலை பிரதிவாதிகள் தரப்பு வழக்குரைஞர்களுக்கு அளித்தால்தான் அந்த விண்ணப்பத்தை ஏற்க முடியும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
அதையடுத்து, அந்த விண்ணப்பத்தின் நகல்களை அவர்களுக்கு அளிக்க விக்ரம்ஜித் பானர்ஜி ஒப்புக்கொண்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...