
சாலை விபத்தில் காயமடைந்த செய்தியாளர் ஒருவரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தில்லியில் உள்ள ஹுமாயூன் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நிகழ்ந்த ஒரு விபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர வியாஸ் என்ற பத்திரிகையாளர் காயமடைந்தார். இதனைக் கண்ட ராகுல் காந்தி, காயமடைந்த பத்திரிகையாளரை தனது காரின் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
காரில் அழைத்துச் செல்லும்போது, பத்திரிகையாளரின் தலையில் வழிந்த ரத்தத்தை ராகுல் காந்தி தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராகுலின் இந்த மனிதாபிமான செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது ராகுலை புகைப்படம் எடுப்பதற்காக நின்றிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் திடீரென கீழே விழ, உடனே ராகுல் காந்தி ஓடிச்சென்று அவரை தூக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...