ராணுவம், விஞ்ஞான சாதனைகளை விமர்சிப்போரை மக்கள் தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

பாதுகாப்பு படையினரின் தேச நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விஞ்ஞானிகளின் சாதனைகள் குறித்து விமர்சிப்போரை (எதிர்க்கட்சி) மக்கள் தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ராணுவம், விஞ்ஞான சாதனைகளை விமர்சிப்போரை மக்கள் தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்


பாதுகாப்பு படையினரின் தேச நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விஞ்ஞானிகளின் சாதனைகள் குறித்து விமர்சிப்போரை (எதிர்க்கட்சி) மக்கள் தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
விண்வெளியிலும் காவலனை (ஏ-சாட்) பாஜக அரசு நிறுத்தியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். பாகிஸ்தானின் பாலாகோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் வெளியிட வலியுறுத்தின.
அதேபோன்று, விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை (ஏ-சாட்) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதை பிரதமர் அறிவித்தது குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ள ஒடிஸா மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் பாஜக பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மோடி பேசியபோது ஒடிஸாவில் மத்திய அரசு மேற்கொண்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை பட்டியலிட்டார். தேசிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அவர் விமர்சித்தார். மோடி கூறியதாவது:
ஒடிஸாவில் சாலை மற்றும் ரயில் வசதிகளுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகக் கடுமையாகப் பணியாற்றியுள்ளது.  நாட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதென்றால் நிதி ஒதுக்கீடுகளுக்கு பற்றாக்குறை ஏற்படுவதே இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் ஒடிஸாவில் 8 லட்சம் பேருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். மிகவும் பின்தங்கிய பகுதிகளில் 3,000 வீடுகளுக்கு மின்வசதியை ஏற்படுத்தியுள்ளோம். 40 லட்சம் வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்பது மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது.
நாம் இதை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? நமது பாதுகாப்பு படையினரையும், விஞ்ஞானிகளையும் அவமதிப்பவர்களை நாம் தண்டிக்க வேண்டாமா? வெறும் முழக்கங்களை எழுப்புவோரைக் காட்டிலும், உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய அரசுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.
தெலங்கானாவில் பிரசாரம்: இதைத்தொடர்ந்து, தெலங்கானா மாநிலம், மெஹபூப்நகரில் மோடி பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தவறவிடவில்லை.
என் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள், அவதூறுகள் ஆகியவற்றை தாண்டி, உங்களின் ஆசி இருப்பதினால் வளர்ச்சியை நோக்கிய இலக்கில் நாங்கள் வேகமாக நடந்தோம். எந்தவொரு நெருக்கடியையும் சகித்துக்கொள்ள உங்கள் ஆசிகள் உதவிகரமாக இருந்தன. அதனால்தான், தீர்மானகரமாக முடிவெடுக்கக் கூடிய அரசை எங்களால் நடத்த முடிந்தது.
சந்திரசேகர் ராவ் மீது விமர்சனம்: தெலங்கானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தலை சந்திரசேகர் ராவ் நடத்தி முடித்தார். ஆனால், முழுமையான அமைச்சரவையை அமைக்க மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. இதற்கு ஏதேனும் ஒரு ஜோதிடர் காரணமாக இருக்கலாம். 
ஒரு ஜோதிடரின் அறிவுரையால் தெலங்கானாவின் நிர்வாகம் நீண்ட காலத்துக்கு தேக்கமடைந்துவிட்டது.
தெலங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் மக்களா அல்லது ஜோதிடரா என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என்றார் மோடி.

கணக்கு கேட்டதால் கூட்டணியை முறித்தார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கணக்கு கேட்டதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள ஆந்திர மாநிலத்தில், பாஜக சார்பில் கர்னூலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என்னை பிரதமர் ஆக வைத்தீர்கள். உங்கள் முதன்மை சேவகன் இரவும், பகழும் பாராமல் நாட்டு மக்களுக்காக உழைத்தார். இந்த மாநிலத்தின் நலனையும் இந்தக் காவலன் நினைவில் வைத்திருந்தார். ஆனால், மத்திய அரசின் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத்தான் சந்திரபாபு நாயுடு செய்து கொண்டிருந்தார். மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக நாங்கள் பணியாற்றியிருக்க முடியும்.
எனது தரப்பில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், இங்கே அரசாண்டு கொண்டிருந்தவரின் நோக்கம் வளர்ச்சி குறித்து இல்லை. யாருடைய கஜானா நிரப்பப்பட்டு வந்தது என்பது குறித்து ஆந்திர மக்களுக்கு தெரியும். அதுகுறித்து இந்தக் காவலன் கணக்கு கேட்டபோது, ஆந்திரத்தின் வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சந்திரபாபுநாயுடு வெளியேறிவிட்டார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com