சுடச்சுட

  

  மோடியை எதிர்த்துப் போட்டியிடாதது ஏன்? பிரியங்கா விளக்கம்

  By DIN  |   Published on : 01st May 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  priyanga-vadra

  காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவுடன் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சிறுமி.


  உத்தரப் பிரதேசத்தில் தனது பொறுப்பில் உள்ள 41 தொகுதிகளிலும் காங்கிரஸின் வெற்றிக்கு உழைக்க வேண்டியிருப்பதால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார்.
  அண்மையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா பிரசாரம் செய்தபோது, அவர் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தினர். அப்போது, நான் வாராணசி தொகுதியில் போட்டியிடக் கூடாதா என்று  அவர்களை நோக்கி பிரியங்கா கேள்வி எழுப்பினார்.
  பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கட்சி விரும்பினால் வாராணசி தொகுதியில் போட்டியிடுவேன் என்று பிரியங்கா பதிலளித்தார். இதையடுத்து, அவர் வாராணசி தொகுதியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
  இந்நிலையில், வாராணசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வாராணசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவர். இதையடுத்து, மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை என்பது உறுதியானதுடன், காங்கிரஸ் கட்சித் தலைமை அவருக்கு வாராணசியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்தது. வாராணசி மக்களவை தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்பது பிரியங்கா காந்தியின் சொந்த முடிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா விளக்கமளித்தார். எனினும், பிரியங்கா இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தார்.
  இந்நிலையில், அமேதியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்காவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளதால் இங்குள்ள 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நான் பணியாற்ற வேண்டியுள்ளது. அனைத்து தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் எனது பிரசாரம் அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் தேர்தலில் போட்டியிட்டால் அந்த ஒரு தொகுதியில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்.
  இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், உத்தரப் பிரதேசத்தில் என்னுடன் தேர்தல் பணியாற்றும் கட்சியினரும் எனக்கு ஆலோசனை அளித்தனர். எனவேதான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்தேன் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai